புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சி ஆட்சி அமைய வாய்ப்பில்லை! பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

0
25

இலங்கையில் புதிய பிரதமருக்கு கீழ் அனைத்து கட்சி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சி ஆட்சி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் ரேடியோவில் பேசிய மகிந்த ராஜபக்ச, தான் உடநலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பரவிய வதந்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இது முற்றிலும் பொய், நோயாளியை பார்ப்பதற்கு கூட நான் மருத்துவமனைக்கு போகவில்லை. நான் உடல் நலத்துடன் இருக்கிறேன், இன்றும் இளைஞர்களுடன் என்னால் ஓட முடியும் என கூறினார்.

மேலும், புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சி ஆட்சி வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கையை மகிந்த நிராகரித்துள்ளார்.

வெவ்வேறு கொள்கைள் காரணமாக இது செயல்படாது. எந்தவொரு பிரதமருடனோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுடனோ கூட பணியாற்ற யாரும் விரும்ப மாட்டார்கள்.

அனைத்துக் கட்சி ஆட்சி அமைந்தால் அது எனது தலைமையில்தான் இருக்கும், எனது பிரதமர் பதவியின் கீழ் தான் இருக்கும் என மகிந்த திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.