கிளிநொச்சியில் பாடசாலையில் மரம் வெட்டியமை தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தினரால் விசாரணைகள்

0
28

கிளிநொச்சி – முட்கொம்பன் பாடசாலை மைதானத்திலிருந்த பெறுமதி வாய்ந்த பாலை மரம் வெட்டப்பட்டமை தொடர்பில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட தரப்பினரிடம் மாகாணக் கல்வித் திணைக்களத்தினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி கல்வி வலயத்துக்கு உட்பட்ட முட்கொம்பன் பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்த பெறுமதி வாய்ந்த பாலைமரம் கடந்த வாரம் பிற்பகல் வெட்டப்பட்டு அதிபர் உள்ளிட்ட சிலரால் எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதேச மக்களின் எதிர்ப்பை அடுத்து வெட்டப்பட்ட மரம் கைவிடப்பட்டதுடன், அதனை காற்றினால் முடிந்து விழுந்ததாகத் தெரிவித்து அகற்றுவதற்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் அனுமதி கோரப்பட்டது.

மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஊடாகவே இதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டதையடுத்து பூநகரி பிரதேச செயலாளரிடம் விசமிகளால் வெட்டப்பட்ட மரத்தை அகற்றுவதற்கென அனுமதி கோரப்பட்டுக் குறித்த பாலை மரம் மரக்கூட்டுத்தாபனத்தினால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேற்படி பெறுமதி வாய்ந்த பாலை மரமானது எந்த அனுமதிகளை இல்லாது எந்தத் தேவைக்காக வெட்டப்பட்டது என்பதை மூடி மறைக்கின்ற செயற்பாடுகளில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட கல்வி உயர் அதிகாரிகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலை மரம் வெட்டப்பட்டமை தொடர்பில் பிரதேச மக்களால் மாகாண கல்வி திணைக்களத்துக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதையடுத்து இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த மரமானது பாடசாலை வளாகத்திற்குள் இல்லை என்றும் பாடசாலை வளாகத்திற்கு வெளியே குறித்த மரம் இருந்ததாகவும் இது வெட்டப்பட்டது தவறான விடயம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இது பற்றி பூநகரி பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு இந்த விடயம் பற்றிக் கேட்டபோது, மேற்படி வெட்டப்பட்ட பாலை மரமானது பாடசாலை விளையாட்டு மைதானத்திலிருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சமுகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய கல்விச் சமூகம் இயற்கை வளங்களை அழிப்பதில் முனைப்புக் காட்டி வருவதாகவும் மேற்படி வலயத்தைச் சேர்ந்த உயர்நிலை கல்வி அதிகாரி ஒருவர் யாழ்ப்பாணத்தில் அமைத்து வரும் வீட்டுத் தேவைக்காகவே இது வெட்டப்பட்டதாகவும் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.