4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கோட்டாபய விடுத்த கோரிக்கை

0
390

நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, பரந்த அபிவிருத்தி மற்றும் கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்பதாக கூறினார்.

ஜப்பானின் குமமோட்டோவில் இன்று ஆரம்பிக்கப்பட்ட 4 ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை பல்லாயிரம் ஆண்டுகளாக வளமான நீர் முகாமைத்துவ கட்டமைப்பைக் கொண்ட ஒரு நாடாகும். எமது முன்னோர்கள் பாரிய நீரியல் திட்டங்களின் மூலம் எமது நிலப்பரப்பை மாற்றியமைத்து, நவீன விவசாயத்தை பயன்படுத்தி இலங்கைக்கு கிழக்கின் தானியக் களஞ்சியமாக நற்பெயரைக் பெற்றுக் கொடுத்தனர்.

நீர் சார்ந்த நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கான எனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு இந்த வளமான பாரம்பரியத்தால் உந்தப்பட்டுள்ளதோடு, அது நிலைபேற்றுத்தன்மையை வலியுறுத்தும் நமது தேசியக் கொள்கையின் முக்கிய ஒரு பகுதியாகும்.

எமது நீர் கட்டமைப்புகளின் நிலைபேற்றுத்தன்மை மற்றும் மீள்தன்மையைப் பாதுகாப்பது எமது முன்னுரிமைகளில் ஒன்றாகும். அதிக சேதன மற்றும் நிலைபேரான விவசாயத்திற்காக இரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகளை அதிகமாக பயன்படுத்துவதை நாங்கள் கட்டுப்படுத்தியமை இந்தத் தேவையின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் ஆகும். 100க்கும் மேற்பட்ட ஆறுகளை சுத்தப்படுத்துவதும், ஆற்றங்கரை அரிப்பு, மணல் அகழ்வு, அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் கழிவு நீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நமது நீர்வழிகளில் வெளியேற்றுவதைக் குறைக்கும் நமது தேசிய திட்டமும் அதே போன்றதுதான்.

2025ஆம் ஆண்டளவில், அனைவருக்கும் சுத்தமான நீரை வழங்குதல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை கணிசமாக மேம்படுத்துவதே தேசிய இலக்காகும். தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் திறன் மற்றும் தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதிலும், குறைந்தளவு வழங்கல் உள்ள பகுதிகளில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றுநோய் காலத்தில் கூட, கடந்த வருடங்களில் ஆண்டுதோறும் வழங்கப்பட்ட நீர் இணைப்புகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், எனது அரசாங்கத்தால் பொதுமக்களுக்கான புதிய நீர் இணைப்புகளின் எண்ணிக்கையை 50% சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க முடிந்தது. நீர் சுழற்சி மேலாண்மையை மேம்படுத்த அவசியமான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்த சாதனைகள், அனைத்து இலங்கையர்களுக்காகவும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பங்கேற்பு அபிவிருத்தியை ஊக்குவிப்பதில் எங்களின் கவனத்தை பிரதிபலிக்கின்றன, இது எனது அரசாங்கத்தின் அபிவிருத்தி முயற்சிகளின் மையமாக உள்ளது.

இந்நிலையில் தொற்றுநோய் காரணமாக மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மற்றும் நமது தற்போதைய நிதி நெருக்கடியின் விளைவாக வளங்களுக்கு உள்ள கடுமையான தட்டுப்பாடுகள் காணப்பட்ட போதிலும், இத்தகைய அபிவிருத்தியை அடைவதற்கும் சுற்றுச்சூழலுக்கான முற்போக்கான நிகழ்ச்சி நிரலைப் பேணுவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது.

இந்த தீர்மானமிக்க காலகட்டத்தில் நமது பொருளாதார மீட்சிக்கு உதவக்கூடிய, எமது நிலையான முயற்சிகளுக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியளித்தல் போன்று விரிவான அபிவிருத்தி உதவிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்கிறது. இன்று வாழும் நாம் அனைவரும் எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியின் காவலர்களாக செயல்படுகிறோம்.

நமது வருங்கால சந்ததியினருக்கு நிலைபேரான வளர்ச்சிக்காக நீரை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இது தொடர்பில் நாம் நமது மக்களுக்காகவும் நமது பூமிக்காகவும் அயராது உழைப்போம் என  ஜனாதிபதி கோட்டாபய இதன்போது மேலும் கூறினார்.