சீனப் பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள் கல்வி கற்க முடியும்!

0
314

சீனப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் மீளவும் சீனாவிற்கு திரும்புவதற்கு அந்நாட்டு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தாய் நாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை மாணவர்களுக்கு, மீளவும் நேரில் கற்றலை தொடங்குவதற்கு தங்கள் வளாகங்களுக்குத் திரும்புவதற்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது.

இந்த தகவலை பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் நேற்று (21-04-2022) வியாழக்கிழமை ஒரு அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளது.

“கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இரண்டு  மாணவர் குழுக்களை சீனாவுக்குத் திரும்புவதற்கு இறுதி செய்துள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலதிக மாணவர்கள் சீனாவுக்குத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” இலங்கைத் தூதரக அறிக்கை தெரிவித்துள்ளது.

“அனைத்து மாணவர்களும் தங்கள் படிப்பிற்கு திரும்புவதற்கு தூதரகம் அதன் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இலங்கையில் இருந்து எத்தனை மாணவர்கள் நாடு திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தூதரக அறிக்கையில் கூறப்படவில்லை.

சீனாவின் கல்வி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2018 இறுதி வரை, 196 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 4,92,185 சர்வதேச மாணவர்கள் சீனாவில் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.