மஹிந்த தலைமையில் அரசாங்கத்தை முன்னகர்த்த தீர்மானம்

0
280

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை வலுவாகக் கொண்டு செல்லும் முன்மொழிவு, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்கால நடவடிக்கைகளை புதிய அமைச்சர்கள் வலுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக இதன்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் உறுதி வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமையை அரசாங்கம் வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் முன்மொழிவை உறுதிசெய்தார்.

எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

ஒரு சில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று சமையல் எரிவாயு பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆதரவிற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.

அரசாங்கத்தை கவிழ்க்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு நம்பிக்கை அளித்துள்ளனர்.

அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.