கனடாவில் பிள்ளைகளுடன் தூங்கிக்கொண்டிருந்த உக்ரைன் பாதிரியார் வீட்டுக்கு தீவைப்பு

0
580

கனடாவில் உக்ரைன் நாட்டவரான பாதிரியார் ஒருவர் வீட்டுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள விக்டோரியாவில் அமைந்துள்ள அந்த வீட்டில், கத்தோலிக்கப் பாதிரியாரான Yuriy Vyshnevskyy என்பவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் பாதிரியாரின் மனைவி ஏதோ சத்தம் கேட்டு எழுந்திருக்கிறார். அப்போது தங்கள் வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட அவர் அதிர்ச்சியடைந்து கணவரை எழுப்ப, அவர் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றிருக்கிறார்.

ஆனால், அந்த வீடு மர வீடு ஆனதால் தீ பயங்கரமாகப் பற்றியெரியத் துவங்க, அவர் வீட்டை விட்டு வெளியே ஓடியிருக்கிறார்.

பின்னர், வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த பாதிரியாரின் பிள்ளைகளை அவரும் அக்கம்பக்கத்திலுள்ளவர்களுமாக பிடித்திருக்கிறார்கள். அவர்களில் 11 வயதுடைய மூத்த பிள்ளை மட்டும் கீழே விழுந்ததில் அவளுக்கு அடிபட்டிருக்கிறது. அவள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவளுக்குக் கையில் தையல் போடப்பட்டுள்ளது.

பிள்ளைகள் ஜன்னல் வழியாக குதிக்கவும், சரியாக தீயணைப்புத் துறையினர் அங்கு வர, அவர்கள் ஏணி ஒன்றின் உதவியுடன் Yuriyயுடைய மனைவியை மீட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், இந்த சம்பவம் உக்ரைன் போர் தொடர்புடையதா என பாதிரியார் Yuriyஇடம் கேட்க, தான் அப்படி எண்ணிப்பார்க்க விரும்பவில்லை என அவர் கூறியிருக்கிறார்.

தனக்கு அச்சுறுத்தல்கள் எதுவும் கூட வந்ததில்லை என்று கூறியுள்ள Yuriy, ஆனால், தனக்கு இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்.

குழந்தைகளுடன் வாழும் ஒரு குடும்பத்தை, அவர்கள் தூங்கும்போது தீவைத்துக் கொளுத்த யார் விரும்புவார்கள் என்கிறார் Yuriy.

இந்த சம்பவம் தொடர்பாக விக்டோரியா பகுதி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.