முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச

0
32

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்தார்.

முற்போக்கு தொழிற்சங்கங்களுக்கான தேசிய நிலையத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று (20) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் எடுத்த தீர்மானங்களாலேயே தற்போதைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நெருக்கடியை உருவாக்குவதற்கு பங்களித்தவர்கள் நிரபராதிகளாகி தற்போதைய அரசாங்கத்தின் மீது சகல பழிகளையும் சுமத்துவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் பிரதமரிடம் சுட்டிக்காட்டினர்.

மக்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையை தீர்க்க அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் என்ற ரீதியில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.