நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை முன் நிறுத்தி இன்று மட்டக்களப்பில் போராட்டம்

0
89

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில; சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டன.

இன்று 12.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்று கூடிய அனைத்து தொழிற்சங்கத்தினரும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை முன் நிறுத்தி குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு வலுச் சேர்ப்பதாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இன்று போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை தேசம் நான்கு பக்கத்திலும் நாசமாய்ப் போய் கிடக்கின்றது இந்த ஆட்சியாளர்களுக்கு இந்த அரசை கொண்டு நடத்த திராணியற்று போயுள்ள காரணத்தினால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் மக்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒரு சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்ப இடமளிக்க வேண்டும் என குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒன்றிணைந்த வங்கி ஊழியர் சங்கம், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், மின்சாரசபை ஊழியர் சங்கம், தபால் திணைக்கள ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்திருந்தன.