12 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடலில் மக்களின் எழுச்சி!

0
600

கொட்டும் மழைக்கு மத்தியிலும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு – காலி முகத்திடலில் 12 ஆவது நாளாகவும் இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.

மழை வெயில் பாராது இளைஞசர்கள் தற்காலிக கூடாரங்களை அமைத்து அந்த பகுதிக்கு “கோட்டாகோகம” என பெயர்சூட்டி இன்றுடன் 12 ஆவது நாளாக போராடி வருகின்றனர்.

இதேவேளை, நேற்று ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமகன் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில், காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அவர்களின் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் ஒளி வீசி அஞ்சலி செலுத்தினர். அத்துடன் மெழுகுவர்த்திகளும் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நேற்றுமுன்தினம் ஊடகவியலாளர்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

நாளுக்கு நாள் போராட்டம் வலுப்பெற்று வருவதோடு போராட்டக்காரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.