“அமைச்சு பதவி எமது கரங்களை பலப்படுத்தி நின்ற பல்லாயிரம் மக்களின் ஆணைக்கு வழங்கப்பட்ட கெளரவமாகவே நான் பார்க்கின்றேன்” – சந்திரகாந்தன்

0
38

கிராமிய வீதிகள் மற்றும் உள்கட்டுமான இராஜாங்க அமைச்சராக நேற்றையதினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றையதினம் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

எமது தேசம் எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீண்டு நாட்டைக் கட்டியெழுப்பும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் கிராமிய வீதிகள் மற்றும் உள்கட்டுமான இராஜாங்க அமைச்சராக நேற்றையதினம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதுடன் இன்றைய தினம் அமைச்சின் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளேன் எனும் செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகையடைகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் என்கின்ற பொறுப்போடு மேலும் இந்த அமைச்சு பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரித்து எமது கரங்களை பலப்படுத்தி நின்ற பல்லாயிரம் மக்களின் ஆணைக்கு வழங்கப்பட்ட கெளரவமாகவே நான் பார்க்கின்றேன்.

அந்த வகையில் எமது மக்களின் அபிவிருத்தி மற்றும் சமூக மேம்பாட்டினை இலக்காக கொண்டு நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் நம்பிக்கை வைத்து என்னை பெருவாரியான ஆதரவுடன் பாராளுமன்றம் அனுப்பிய உங்களுக்கு பணியாற்றுவதற்கு கிடைத்த வாய்ப்பாக இந்த அமைச்சுப் பொறுப்பினை கருதுகின்றேன்.

2008-2012 காலப்பகுதியில் கிழக்குமாகாண சபையில் முதல்வராக இருந்து நாம் வழங்கிய ஆட்சியினைப் போன்று செயலூக்கமும் வினைத்திறனும் மிக்க ஊழலற்ற எமது மக்கள் நலப் பணிகள் இந்த இராஜாங்க அமைச்சு பொறுப்பின் ஊடாக முழுத் தேசத்துக்குமானதொன்றாக தொடரும் என்று உறுதி கூறுகின்றேன்.எனது மக்களாகிய நீங்களே எனது பலம்.