வவுனியா குடிவரவு – குடியகல்வு காரியாலயம் முன்னால் நீண்ட நேரமாக காத்திருக்கும் மக்கள்!!

0
39

வவுனியா, குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயம் முன்னால் கடவுச் சீட்டு பெறுவதற்காக மக்கள் 5 மணித்தியாலத்திற்கு மேலாக வீதியில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் பொறுப்பற்ற விதமாக செயற்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ள்ளனர்.

வவுனியா, உள்வட்ட வீதியில் வடமாகாணத்திற்கான குடிவரவு – குடியகல்வு திணைகளத்தின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ளது. குறித்த அலுவலகத்தில் புதிதாக கடவுச் சீட்டை பெறுதல், கடவுச் சீட்டை புதுப்பித்தல் உள்ளிட்ட தேவைகளுக்காக காலை 6 மணிக்கு முன்பிருந்தே மக்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் காலை 8.30 இற்கு அலுவலகத்திற்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சுமார் 50 பேர் வரையில் கடவுச் சீட்டு வளாகத்திற்குள் அனுமதித்து விட்டு ஏனையவர்களை வீதியில் நிற்க வைத்தனர்.

வீதியில் சுமார் 300 இற்கும் மேற்பட்டவர்கள் காலையில் இருந்து காத்து நிற்கின்றபோதும், பொறுப்பு வாய்த்த உத்தியோகத்தர்களோ அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தர்களோ தமக்கு சரியான பதிலை வழங்காது நீண்ட நேரம் காத்து நிற்க வைத்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் வட மாகாணத்தின் பல இடங்களில் இருந்தும் தாம் வருகை தந்துள்ள நிலையில், தாம் இன்று விண்ணப்பிக்க முடியுமா அல்லது முடியாதா என்பது கூட தெரியாது நீண்ட நேரம் வீதியில் காத்து நிற்பதாகவும், குடிவரவு குடியகல்வு அலுவலகத்தில் மக்களுக்கான இருக்கைகள் வெறுமையாக உள்ள போதும் எம்மை உள்ளே எடுக்காது வீதிகளில் நிற்க வைத்துள்ளனர்.

அத்துடன், ஒரு மணியுடன் அவர்கள் இனி உள்ளே எடுக்க முடியாது எனக் கூறி கடந்த சில நாட்களாக திருப்பி அனுப்பியதால் சிலர் மூன்று தினங்களாக வருகை தந்து காவல் நிற்கின்ற நிலை கூட உள்ளது என பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் வினவியபோது, நாம் ஒன்றும் இங்கு வேலைசெய்யாமல் இருக்கவில்லை. வேலை நடைபெறுகிறது எனப் பதில் அளித்தனர்.