“அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது” – மஹிந்த

0
456

ஒரு அரசாங்கம் வேண்டுமென்றே தனது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாது என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து உள்ளனர் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு போன்ற எமக்கு தெரிகின்ற ஒரு சில பிரச்சினைகளாக இருக்கின்ற போதிலும் ஆனால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு தற்போது முகம் கொடுத்துள்ளனர்.

நாம் தற்போது இருக்கின்ற இவ்வேளையில் இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக நாம் ஒன்றாக ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அரசியல் ரீதியாக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் நேரம் இதுவல்ல என நான் நினைக்கிறேன். நம் அனைவரையும் தொடர்ச்சியாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எம்மில் மக்களை உண்மையாக நேசிப்பவர்கள் யார் என்பதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே ஒரு அரசாங்கம் என்ற வகையில் எமக்கு உள்ள பொறுப்பில் இருந்து நாம் விடுபட முடியாது. அத்துடன் இந்த பிரச்சினையில் இருந்து விடுபட, தற்போதுள்ள பிரச்சினைகளை ஒவ்வொன்றாக நாம் முன்வைப்பது அவசியமாகும். அரசியல் ரீதியாக எம்மிடையே காணப்படுகின்றன பிரச்சினைகளை களைந்துவிட்டு, நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது எவ்வாறு என்பது தொடர்பில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்.

எனவே அரசாங்கம் எனும் வகையில் எவ்வித பேதமும் இன்றி நாட்டை கட்டியெழுப்ப முன்வருமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தமையானது, ஒரு மேலான நோக்கத்தின் அடிப்படையிலேயேயாகும். அந்த அழைப்பு இன்றும் செல்லுபடியானது என்பதை நான் ஞாபகமூட்டுகின்றேன். நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்கான பொருளாதார முகாமைத்துவம் அவசியமாகும். அதனை மேற்கொள்ள, மக்கள் அங்கீகரிக்கும் சர்வதேச நிபுணத்துவம் கொண்ட குழுவினர் தற்போது முன்வந்துள்ளனர்.

அது மாத்திரமன்றி ஆசிய அபிவிருத்தி, சர்வதேச நாணய நிதியம், வங்கி உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்களுடன் நாம் தற்பொழுது பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். அவ்வாறே அவர்களிடமிருந்து சிறந்த பதில்களில் கிடைத்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் குறுகிய காலத்திற்கு இந்நிலைமையை முகாமைத்துவம் செய்வதோடு, நீண்ட கால அடிப்படையில் நாட்டில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதிருக்க சிறந்த அடித்தளம் ஒன்றை அமைப்பது அவசியமாகும். எனவே எதிர்ப்புப் போராட்டங்களுக்கு அப்பாற்பட்ட தலையீடு இதற்கு அவசியம் என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தது இதன் காரணமாகவே.

தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு நாம் கலந்துரையாடல்கள் மூலமே தீர்வு காணமுடியும். இன்று காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கலந்துரையாட வருமாறு நான் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களது பெறுமதியான கருத்துக்களை கேட்டறிந்து மேற்கொள்ள வேண்டிய தலையீட்டை மேற்கொள்ள நாம் முன்வந்திருந்தோம் என்பதை நான் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.

உரிய மின் உற்பத்தி நிலையங்கள், மீள் புதுப்பிக்கத்தக்க வளங்கள் தொடர்பான திட்டங்களை ஒரு சிலர் வேண்டுமென்றே புறக்கணித்தனர். தற்போது குறித்த தவறை எதிர்காலத்தின் மீது போடுவதால் எவ்வித பலனும் இல்லை. அதற்காக நாம் மாற்று வழிகளை எடுத்து வருகின்றோம். மின் உற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதன் மூலமும் தற்பொழுது மலையகத்தில் பெய்துவரும் மழை மூலமும் இப்பிரச்சினைகளை மிக விரைவில் தீர்க்க முடியும்.

ஓரிரு நாளில் இப்பிரச்சினைகள் தீரும் என சொல்ல முடியாது எனும் நிலையில் மிக விரைவில் எம்மால் முடிந்த வகையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிமிடத்திற்கு நிமிடம் ஆவது நாம் மின்வெட்டை குறைப்போம். அவ்வாறே, எதிர்வரும் சில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக, ஜனாதிபதி நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.

எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். அன்றாட பணிகளுக்கு நடுவில் பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதால் ஏற்படும் வேதனையை நாம் அறிந்துள்ளதால். இந்நிலையில் இருந்து விடபடுவது அவசியமென நாம் அறிந்துள்ளோம்.

24 மணித்தியாலங்களுக்குள் இவற்றுக்கு தீர்வு காண முடியாவிட்டாலும் நாம் உங்களை நீண்ட நாட்களுக்கு வரிசைகளில் நிற்க வைக்க மாட்டோம் என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முயற்சிக்கும் போதும் எமது நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக நிலைமைகள் மிக முக்கியமானதாகும். அது தொடர்பான நடைமுறை ரீதியான தீர்வாக, அரசியலமைப்பு மறுசீரமைப்பு ஏற்படுத்துவது அவசியம் என நான் நம்புகின்றேன். அதன் ஆரம்ப கட்டமாக, அத்தியாவசிய மற்றும் காலத்திற்கு ஏற்றவாறு  19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியாக நடைமுறைப்படுத்துவது குறுகிய காலத்தில் எடுக்கக்கூடிய காலத்திற்கேற்ற தீர்வு என்பது எனது நம்பிக்கையாகும்.

இதனூடாக ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் விரிவான புதிய அரசியலமைப்பு திருத்தத்தை நோக்கி பயணிக்க வேண்டியுள்ளது. அது தொடர்பில்

நாம் எடுக்கின்ற முயற்சிகளுக்கு கட்சி எதிர்க்கட்சி என்ற பேதமின்றி உங்களது ஒத்துழைப்பும் மக்களின் ஆசீர்வாதமும் கிடைக்குமென நான் எதிர்பார்க்கின்றேன்.