அரசாங்கத்திற்கு எதிராக ஹட்டனில் இரண்டாவது நாளாக தொடரும் போராட்டங்கள்!

0
431

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும்(18) அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது.

இப்போராட்டம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று (17) குறித்த போராட்டத்தை ஆரம்பித்துவைத்துள்ளனர். 

இந்நிலையில், இன்றைய போராட்டத்தில் “கோ கோட்டா ஹோம்,” “மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும்,” “தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும்,” “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும்,” “விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும்” போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். 

அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். இதன்போது பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் “GO GOTA HOME” கிராமத்தின் கிளை ஒன்றும் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.