20 வது திருத்தச் சட்டத்தை குப்பைக் கூடைக்குள் போடுங்கள்: முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

0
463

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து அதனை சமர்ப்பித்த பிரதமர் என்ற வகையில் மகிழ்ச்சியடைவதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இன்று முக்கியமான நாள், ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு தரப்பு எதிரணியில் வந்து அமர்ந்துள்ளது.

அவர்களின் நிலைப்பாடுகளும், எமது நிலைப்பாடுகளும் ஒன்றாக இல்லாமல் இருக்கலாம். எனது நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது. இவர்கள் எதிரணிக்கு வந்துள்ளதால், எமக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்ற நேரிடும்.

நாங்கள் நாடாளுமன்றத்தில் என்ன செய்கின்றோம் என்பதை நாடு பார்த்துக்கொண்டிருக்கின்றது. கடந்த வாரத்தை போல் நாம் நடந்துகொண்டால், போராட்டகாரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி வருவார்கள்.

நாடாளுமன்றத்தை விஜயபாகுவின் அரச மாளிகையை போல் எப்போதும் பாதுகாத்துக்கொண்டிருக்க முடியாது. எமது செயல்கள் மூலம் மாத்திரமே எம்மால் பாதுகாக்க முடியும். நாட்டின் நிலைமைக்கு அமைய எதிர்க்கட்சியினர் தமது பொறுப்பை கைவிட மாட்டார்கள் என்பதை நான் பிரதமருக்கு கூற வேண்டும்.

புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது, நான்கு அமைச்சர்கள் கூட இன்று நாடாளுமன்றத்தில் இல்லை என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். முதல் நாளில் நான்கு பேர் வரவில்லை என்றால், மறுநாள் எத்தனை பேர் வருவார்கள்?. ஒரு அமைச்சர் வொஷிங்டனில் இருக்கின்றார் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நாடாளுமன்றத்தை நாம் மதிக்கின்றோம் என்றால், எதிர்க்கட்சிக்கு இங்கு வாய்ப்புள்ளது என்றால், அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும். நாம் தற்போது கஷ்டமான காலத்தில் இருக்கின்றோம், மேலும் நாட்கள் நகரும் போது கஷ்டங்கள் அதிகரிக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை எடுத்து வந்தாலும் இந்த நிலை ஏற்படும். நாடாளுமன்றம் என்ற வகையில் நாம் எப்படி செயற்பட போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். இவ்வாறான நிலைமை ஏற்படும் இவற்றை செய்யுங்கள் என்று நாங்கள் அரசாங்கத்திற்கு கூறினோம், அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.

எனினும் தற்போதைய நிலைமையை நாம் எதிர்கொள்ள வேண்டும். 19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த பிரதமர் என்ற வகையில், அதனை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது குறித்து நான் மகிழ்ச்சியடைக்கின்றேன்.

முடிந்த விரைவில் 20 வது திருத்தச் சட்டத்தை குப்பைக் கூடைக்குள் போடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். 19வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வர நாம் நடவடிக்கை எடுப்போம். அதனை செய்ய வேண்டியது அவசியம்.

19வது திருத்தச் சட்டத்தின் கீழேயே அரச தலைவருக்கு மக்கள் ஆணை கிடைத்தது. 20வது திருத்தச் சட்டத்தின்படி செயற்பட அவருக்கு மக்கள் ஆணையில்லை. உரிமையும் இல்லை. 19வது திருத்தச் சட்டத்தை நாம் கொண்டு வருவோம். நாட்டில் இருக்கும் வரிசைகள் எதுவும் நின்று விடப் போவதில்லை.

எப்படி நிவாரணங்களை வழங்க வேண்டும். வரவு செலவுத் திட்டத்தை திருத்த வேண்டும். நாங்கள் நிதி நிர்வாகம் பற்றி பேசுகிறோம். அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் சரித்த ஹேரத், அனைத்தையும் கட்டுப்படுத்தியுள்ளதாக கூறினார்.

நீங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இருந்தால், ஸ்ரீலங்கன் விமான சேவை 25 விமானங்களை எப்படி பெற்றுக்கொள்ளும். ஸ்ரீலங்கன் விமான சேவை நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் என அவர் எமக்கு கூறினார்.

அதனை விற்பனை செய்ய வேண்டும் என்று சொன்னார். நாங்கள் நஷ்டத்தில் இயங்கவில்லை எமது பணத்தில் விமானங்களை குத்தகைக்கு பெறுகிறோம் என்று கூறுகின்றனர். அதற்கு முன்னர் இலங்கை வங்கியிடம் பெற்ற கடனை திரும்ப செலுத்துமாறு கூறுங்கள்.

இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். நிதி நிர்வாகத்தை நாடாளுமன்றம் கையில் எடுக்க வேண்டும். அதற்கான வரைவு ஒன்றை நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.