இலங்கையின் கடன் மதிப்பீட்டை குறைத்த மூடிஸ் நிறுவனம்!

0
447
A Moody's sign is displayed on 7 World Trade Center, the company's corporate headquarters in New York, February 6, 2013. REUTERS/Brendan McDermid

மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை “Ca2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்துள்ளது. கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது.

தன்னுடைய கடன்களை உரிய காலத்தில் செலுத்த முடியாது என இலங்கை அண்மையில் அறிவித்திருந்தது. இவ்வாறு கடன் தவணை தவறுவது, ‘ஒரு நாடு திவாலான நிலைமை’ என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. விலைவாசி உயர்ந்திருக்கிறது. அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. நாணயத்தின் மதிப்பு கடுமையாகச் சரிந்திருக்கிறது.

இறக்குமதிகள் முடங்கியிருக்கின்றன. இறக்குமதியை நம்பியிருக்கும் தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், கடனைக் உரிய காலத்தில் மீளச் செலுத்த இயலாது என இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, மூடிஸ் நிறுவனம் இலங்கையின் கடன் மதிப்பீட்டை “Ca2” இலிருந்து “Ca” ஆகக் குறைத்துள்ளது.

இலங்கை 51 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் சுமார் 35 பில்லியன் டொலர்கள் வரை கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்திருக்கிறது இலங்கை.

இந்த ஆண்டிலேயே சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் இலங்கையிடம் இப்போது 1.93 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.