காலி முகத்திடல் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு!

0
37

Gota Go Home மக்கள் போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ராஜபக்ச அரசுக்கு எதிரான தன்னெழுச்சியான போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. எவ்வித பாகுபாடும் இன்றி ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம், நாட்டு மக்களுக்கு அதிகாரம் வழங்குமாறு நாடு தழுவிய ரீதியில் வளர்ந்து வரும் போராட்டமாக மாறி வருகின்றது.

இந்த மக்கள் போராட்டத்திற்கு இலங்கையிலுள்ள அனைத்து ஊடகவியலாளர்களும் தமது அமைப்பு, தொழில், மொழி வேறுபாடின்றி பூரண ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.

இலங்கை முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றிணைந்த பேரணி ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆரம்பமாகவுள்ளது.

காலி முகத்திடல் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவான இந்த பேரணியில் நிறுவன அல்லது தொழில்சார் அல்லது மொழி வேறுபாடுகள் இன்றி நாடு முழுவதிலும் உள்ள ஊடகவியலாளர்களை பங்கேற்குமாறு, ஊடகத் துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் கேட்டுக்கொள்கிறது.

அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்களால் முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு நிறுவனங்களின் தலைவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

அத்துடன் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அன்றைய அணிவகுப்பில் பங்கேற்க அனுமதிக்குமாறும், அன்று பிற்பகல் அவர்களை சேவையில் இருந்து விடுவிக்குமாறும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை ஊடகத் துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் கேட்டு கொள்வதாக” குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.