இலங்கையில் உணவுப் பொதிகளை கொள்வனவு செய்வோருக்கு முக்கிய தகவல்

0
273

உணவுப்பொதிகளின் விலைகள் 20 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உணவுப்பொதிகள் மற்றும் இதர உணவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கும், விநியோகிப்பதற்கும் பெரும்பாலும் முச்சக்கரவண்டிகள் மற்றும் மினி ட்ரக் வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அது நிச்சயமாக போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வழியேற்படுத்தும்.

போக்குவரத்து கட்டண அதிகரிப்பானது நேரடியாக எம்மைப் பாதிக்கும். எனவே, உணவுப்பொதிகளின் விலை எவ்வளவு என்று எங்களால் கூற முடியாது.

ஆனால் ஒரு முன்முயற்சி நடவடிக்கையாக, உணவுப்பொதிகளின் விலையை 20 சதவீதத்தால் உயர்த்த முடிவு செய்துள்ளோம் என அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் பல பகுதியில் உணவுப்பொதிகளின் விலையானது பாரியளவில் அதிகரித்திருந்த நிலையில் மீண்டும் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானது உணவுப்பொதிகளை கொள்வனவு செய்வோருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.