இன்னொரு தளபதியை இழந்த ரஷ்யா! சூளுரைத்த உக்ரைன்

0
549

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் மேலும் ஒரு தளபதியை இழந்துள்ள நிலையில், இனி எங்கள் இலக்கு அவர்களின் மொத்த தளபதிகளையும் வேட்டையாடுவது தான் என உக்ரைன் தரப்பு சூளுரைத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 54வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய தரப்பு முக்கிய போர்க் கப்பலை இழந்துள்ளதுடன், இன்னொரு தளபதியையும் இழந்துள்ளது.

Ivan Grishin என்ற தளபதியை இழந்துள்ளது ரஷ்ய துருப்புகளுக்கு பேரிழப்பாகவே பார்க்கப்படுகிறது. ரஷ்ய எல்லையோர நகரமான Smolensk பகுதியில் சனிக்கிழமை தளபதி Ivan Grishin உக்ரைன் துருப்புகளால் கொல்லப்பட்டுள்ளார்.

ரஷ்யாவின் Moskva போர்க் கப்பல் ஏவுகணையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது விளாடிமிர் புடின் துருப்புகளுக்கு பேரிடியாக மாறியுள்ள நிலையில், தற்போது தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ள தகவலும் குறிப்பிட்ட சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர் ரஷ்யா இதுவரை 8 முக்கிய தளபதிகளை இழந்துள்ளது. மட்டுமின்றி, 20,000 இராணுவ வீரர்களையும் உக்ரைனில் ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இனி ரஷ்யாவின் முக்கிய தளபதிகளை குறிவைத்து தங்கள் நடவடிக்கை இருக்கும் எனவும், ஒவ்வொரு தளபதிகளாக வேட்டையாடப்படும் எனவும் உக்ரைன் தரப்பு சூளுரைத்துள்ளது.

இதனிடையே, ரஷ்ய துருப்புகள் வெளியேறிய இரண்டு வாரங்களுக்கு பின்னர், கீவ் சுற்றுவட்டாரங்களில் இருந்து இதுவரை 900 அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டி எடுத்துள்ளதாக உக்ரைன் தரப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

உக்ரேனிய ஜனாதிபதியின் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணித்தியாலங்களில் நாடு முழுவதும் உள்ள எட்டு பிராந்தியங்களில் ரஷ்ய துருப்புகள் தொடர் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.