பெண் பிரதிநிதித்துவத்தைப் புறக்கணித்த புதிய அமைச்சரவை!

0
564

புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் பெண் பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கத் தவறியுள்ளனர்.

புதிய அமைச்சரவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதிஅரச தலைவர் மாளிகையில் கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

இவ்வாறு நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களில் பெண் பிரதிநிதித்துவம் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சும் இந்த அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. தற்போது நாடாளுமன்றில் பெண் உறுப்பினர்களான பவித்ராதேவி வன்னியாராச்சி, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சீதா அரம்பேபொல, கீதா குமாரசிங்க, கோகிலா குணவர்தன, முதித பிரிஷாந்தி, ராஜிகா விக்கிரமசிங்க, மஞ்சுளா திஸாநாயக்க, மற்றும் டயானா கமகே ஆகியோர் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, முன்னாள் அமைச்சரவையின் கீழ் சுகாதாரம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து ஆகிய அமைச்சுப் பதவிகளை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், புதிய அமைச்சரவையின் கீழ் அவர்களுக்கு அமைச்சுப் பதவியை வகிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.