பாகிஸ்தானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த தலீபான்கள்!

0
37

பாகிஸ்தானுக்கு தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் 2,700 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்கின்றன.

இருநாட்டு எல்லைப்பகுதியில் தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத அமைப்புகள் இருநாடுகள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதேவேளை, தெக்ரி-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் இருந்தவாறு தங்கள் நாட்டில் தாக்குதல்களை அரங்கேற்றி வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதில், 6-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் ஆப்கானிஸ்தானின் குனர் மாகாணம் ஷெல்டன் மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,

பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஆப்கானிஸ்தான் மண்ணில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலுக்கு அரசு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

இது கொடுங்குற்றம். இந்த சம்பவம் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே பகைமையை உருவாக்கும். போர் தொடங்கினால் அது யாருக்கும் சாதகமானதாக இருக்காது. போர் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்கும் என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ளவேண்டும்’ என்றார்.