இங்கிலாந்து பிரதமர் ஜோன்சன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு தடை விதித்தது ரஷ்யா!

0
657

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் சில மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரில் இங்கிலாந்து எடுத்துவரும் ரஷ்ய விரோத நிலைப்பாட்டின் காரணமாகவே இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ், பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ், துணைப் பிரதமர் டொமினிக் ராப், உள்துறை செயலாளர் பிரிதி படேல் உள்ளிட்ட இங்கிலாந்து முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல்வாதிகள் 10 பேர் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.

உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது பிரிட்டன் விதித்துள்ள தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மொஸ்கோ இதேபோன்ற தடையை விதித்தது.

ரஷ்யாவை சர்வதேச அளவில் தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட லண்டனின் கட்டுப்பாடற்ற பிரச்சாரம், அது குறித்த நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையிலான நடவடிக்கைகளே இந்தத் தடைக்கான காரணம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அரச தலைமை உக்ரைனில் நிலைமையை வேண்டுமென்றே மோசமாக்குகிறது. ஆயுதங்களை விநியோகிப்பதுடன், நேட்டோவின் தரப்பில் இதேபோன்ற முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்கள் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.