சர்வதேச நாணய நிதிய முதல் தவணை நிதியுதவி கிடைக்க 9 மாதங்கள்! சேவைக்கட்டணங்களில் உயர்வை எதிர்பார்க்கலாம்

0
26

 சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கொடுப்பனவு இலங்கைக்கு கிடைப்பதற்கு ஆறு முதல் ஒன்பது மாதங்கள் ஆகலாம் என்று அரசாங்கத்தின் ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திற்கும் நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழுவிற்கும் இடையிலான பொருளாதார மீட்புப் பொதி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நாளை வோசிங்டனில் ஆரம்பமாகவுள்ளன.

இந்தநிலையில் பொருளாதாரத்துறையில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்களில் ஒருவரான சாந்த தேவராஜன், இந்த தகவலை ஞாயிறு ஆங்கில இதழ் ஒன்றிடம் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தித்துறைக்கான பேராசிரியராக பதவி வகிக்கும் அவர்,சர்வதேச நிதிகளை பெற்றுக்கொள்வதற்கு ஒரு நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை தடையாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அல்லது ஏனைய சர்வதேச அமைப்புகளிடமிருந்து நிதி பெறுவதற்கு இலங்கையின் அரசியல் உறுதியற்ற தன்மை ஒரு தடையாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

வரி அதிகரிப்புகள், செலவுக் குறைப்புக்கள் மற்றும் ஏழைகளுக்கான நிதி பரிமாற்றங்கள் போன்றவற்றை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதா என்பவற்றையே இந்த அமைப்புகள் பார்க்கின்றன.

இந்த விடயங்களில் திருப்தி ஏற்பட்டால, அமைப்புக்கள் ஒரு நாட்டுக்கு பணத்தை வழங்கலாம். அது சிறுபான்மை அரசாங்கமாக இருந்தாலும் சரி அல்லது சிறிய பெரும்பான்மை அரசாங்கமாக இருந்தாலும் சரி, இந்த விடயத்தில் பிரச்சினை எழாது என்றும் சாந்த தேவராஜன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட கடன் சேவை கொடுப்பனவுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவது மற்றும் கடன் மறுசீரமைப்பு போன்ற அறிவிப்புகள், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றிலிருந்து நிதி ஆதாரங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நாட்டின் வரிகளில் சில அதிகரிப்புகளை மக்கள் எதிர்பார்க்கலாம். எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்களில்; அதிகரிப்பு நிகழலாம் என்றும் அவர் எதிர்வை வெளியிட்டுள்ளார்.