புது வருடத்தில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்

0
40

முல்லைத்தீவு – நெடுங்கேணி கள்ளிக்காட்டுப்பகுதியில் உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நெடுங்கேணி வீதியில் கள்ளிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று முன்தினம் இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம் வட்டாரம் குமுழமுனையினை சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுவருட தினமான நேற்று முன்தினம் (14) குறித்த குடும்பஸ்தர் தண்டுவானில் இருந்து முள்ளியளை நோக்கி உந்துருளியில் இரவு 10.00 மணியளவில் பயணித்துள்ளார்.

கள்ளிக்காட்டுப்பகுதியில் உந்துருளி வேகமாகச் சென்று பாலத்தில் மோதி, வயல் கம்பிக்கட்டையில் மோதியதால் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த குடும்பஸ்தர் இரவு வேளை ஆட்கள் நடமாட்டம் குறைவான வீதியாக காணப்பட்டுள்ளதால் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து முள்ளியவளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி த.கெங்காதரன் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் உடல் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.