மகிந்தவை புகழ்ந்து “ஆயுபோவேவா” என்ற பாடலை பாடியதற்காக மன்னிப்பு கோரும் பாடகி

0
411

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான நிலைமைக்கு தான் பாடிய “ஆயுபோவேவா” பாடல் ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்திருந்தால், அதற்காக சகலரிடமும் மன்னிப்பு கோருவதாக அந்த பாடலை பாடிய சஹேலி கமகே தெரிவித்துள்ளார்.

தான் அந்த பாடலை கலைக்காக பாடிய பாடல் மாத்திரமே எனவும் அந்த பாடலை பாடிய குறித்து மிகவும் மனம் வருந்துவதாகவும் சஹேலி கமகே கூறியுள்ளார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ஆயுபோவேவா” பாடல் பற்றி நீங்கள் அறிய குறுகிய பதிவை இடுவதற்கு இதுவோ பொருத்தமான சந்தர்ப்பம் என நான் உணர்கின்றேன். 30 ஆண்டு கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த எமது நாட்டை மீட்டதன் காரணமாக மகிழ்ச்சிக்கு உள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் இதய துடிப்பை பாடலாக வெளியிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் எனது குரல் மூலம் பங்களிப்பை வழங்குவது கடமை என கருதினேன்.

இந்த பாடல் எந்த அரசியல் கட்சியின் தலையீடும் இன்றி, நான் மற்றும் எனது பெற்றோர் இணைந்து எமது பணத்தில் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காது உன்னத நோக்கில் உருவாக்கிய பாடல்.

இந்த பாடல் காரணமாக அப்போது இளம் யுவதியாக இருந்த நான், எதிர்நோக்கிய அவமதிப்புகள், அசௌரியங்களுக்கு முடிவு இல்லை. தற்போதும் அவை அப்படியே உள்ளன.

எனது தாய் நாட்டை நான் மிகவும் நேசித்தாலும் தற்போது நான் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றேன். இந்த பாடல் காரணமாகவே ஒரு பாடகியாகவும் மருத்துவராகவும் எனது பங்களிப்பை எனது நாட்டுக்கு வழங்க முடியாமல் போனது. இது இன்றும் என்னால், தாங்கிக்கொள்ள முடியாத வேதனை.

பலரும் அறிந்த ஆயுபோவேவா பாடலுடன் போரில் உயிரிழந்த படையினரை நினைவுகூர்ந்து “சத்திய ஒபாய்” என்ற பாடலை வெளியிட்டேன். எனினும் ஆயுபோவேவா பாடல் இதனையும் மீறி பிரபலமானதால், நான் அரசியல் அடிவருடி என முத்திரை குத்தப்பட காரணமாக அமைந்தது.

தற்போது எமது தாய் நாடு அடைந்துள்ள துரதிஷ்டவசமான நிலைமைக்கு நான் பாடிய ஆயுபோவேவா பாடல் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்து இருக்குமாயின் அதற்காக எனது நாட்டின் சார்பில் அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்.

வெளிநாட்டில் இருந்தாலும் இலங்கையர்களான உங்களது போராட்டத்திற்கு மனபூர்வமான ஆதரவை வழங்குகிறேன். இன்றும் நாளையும் எனது தாய் நாட்டின் நலனுக்காக நடத்தப்படும் எந்த மக்கள் போராட்டமாக இருந்தாலும் அதற்கு அச்சமின்றி எனது பங்களிப்பை வழங்குவேன்.

எனது தாய் நாடு வெல்லட்டும். உங்கள் அனைவரும் வெற்றி கிட்டட்டும். பிறந்துள்ள இந்த புத்தாண்டு உங்களது எதிர்பார்ப்புகள் நிறைவேறும் மகிழ்ச்சி நிறைந்த அதிஷ்டமான யுகத்தின் ஆரம்பமாக இருக்கட்டும் என சஹேலி கமகே தனது பதிவில் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மஹாராஜன் என்று புகழ்ந்து பாடுவதாக ஆயுபோவேவா பாடல் வரிகள் எழுதப்பட்ருந்ததுடன்  மகிந்த ராஜபக்ச இந்த பாடலை பாடிய, சஹேலி கமகேவின் பெயரை வீதி ஒன்றுக்கு சூட்டியதுடன் அதனை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.