பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன அரசியல் தலைவர்களை பாதுகாக்கிறாரா? அருட் தந்தை காமினியின் கேள்வி

0
41

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணையாளர்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் சட்டத்தை அமுல்படுத்துவதில் உண்மையாக அர்ப்பணிப்புடன் செயற்படும் பட்சத்தில், அவர்கள் எவ்வாறு குற்றமற்றவர்கள் என அறிவிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார்கள்; என்று இலங்கை கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்களுக்குப் பதிலளிக்கும் வகையில் வணக்கத்திற்குரிய தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

முதலாவதாக, இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து அரசியல் தலைவர்களைப் பாதுகாப்பதற்கு கமல் குணரத்னவுக்கு அரச ஊழியர் என்ற முறையில் என்ன தார்மீக உரிமை உள்ளது? என்று அருட் தந்தை வினவியுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன,

இந்தநிலையில் இந்த தாக்குதலில் அரசியல் சதி இல்லை என்பதை நிரூபிக்க புலனாய்வுக் குழுக்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் என்ன? என்றும் காமினி பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அந்த விசாரணைகளின் அறிக்கைகள் எங்கே என்;றும் அவர் வினவியுள்ளார்

உயிர்த்த தாக்குதல் குறித்து தகவல்களை அளித்த இந்திய உளவுத்துறையின் உதவியுடன் இணைந்து அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் நிலந்த ஜெயவர்தன ஏன் நடவடிக்கை எடுத்திருக்கக் கூடாது என்ற வகையில் அவர் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது?

இவற்றையெல்லாமல் செய்யாமல், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டதாகவும், வழக்குத் தாக்கல் செய்வதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், சிரத்தையுடன் நேரத்தைச் செலவழிப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன எவ்வாறு ஊடக சந்திப்பில் கூறமுடியும் என்று காமினி பெர்ணான்டோ கேள்வி எழுப்பியுள்ளார்

இந்தநிலையில் தாக்குதல்கள் குறித்து முன்னரே எச்சரித்தும், தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தமது கடமைகளை பாரியளவில் புறக்கணித்தமைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவினால் குறிப்பிடப்பட்டவர்களை எவ்வாறு குற்றமற்றவர்கள் என அறிவித்து நீதிமன்றத்தால் விடுவிக்க முடியும் எனவும் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கேட்டுள்ளார்.