இறம்பொடையில் அடித்துச்செல்லப்பட்ட மேலும் இருவரின் சடலங்களும் மீட்பு

0
610

நுவரெலியா – இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டுக் காணாமல் போயிருந்த மூவரில் நேற்றையதினம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இருவரின் சடலம் மீட்கப்படாத நிலையில் நேற்றைய தினம் பெய்த மழை மற்றும் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகத் தேடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டது.

மூன்றாவது நாளாகவும் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதியம் வேளையில் குறித்த யுவதி மற்றும் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியாவைச் சேர்ந்த விதுசான் (வயது – 21) என தெரியவந்துள்ளது.

கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின் போதே இவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவர்களின் சடலங்கள் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மின் உற்பத்திக்காக நீரை வழங்கும் நீர்த் தாங்கியிலிருந்தே மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் மீதான மரண விசாரணைகளின் பின் பிரேதப் பரிசோதனைக்காக கம்பளை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேதப் பரிசோதனைகளின் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.