20வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்து 19வது திருத்தத்தை கொண்டு, கேலிக்கூத்தான அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டும்

0
283

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அரசாங்கம் அமைப்பது கேலிக்கூத்தானது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் தலைமையிலான அமைச்சரவை அவருக்கு கீழ் உரிய முறையில் செயற்பட முடியாமையே இதற்கான காரணம் என அவர் தெரிவித்தார்.

இதன்படி அரச தலைவர் பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலக வேண்டும் எனவும் கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து 20வது அரசியலமைப்பு திருத்தத்தை இரத்து செய்து 19வது திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“இந்த நேரத்தில் நாட்டுக்கு பாதுகாவலான அரசாங்கம் தேவை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், இந்த நாட்டு மக்கள் அரச தலைவர் பதவி விலக வேண்டும் எனத் தெரிவிப்பதையும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் கேட்க வேண்டும் என்பதுதான் நாட்டு மக்களின் ஒரே கோரிக்கை. இந்த அடிப்படையில்தான் அரசியல் கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என கட்சி பேதமின்றி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இப்போது 69 இலட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகிறார்கள். 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் கிடைத்த அதியுச்ச அதிகாரங்களை வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சி எம்.பி.க்களை காபந்து அரசாங்கம் அமைக்குமாறு அரச தலைவர் அழைப்பது கேலிக்கூத்தானது.

அரச தலைவரின் அமைச்சரவை செயலிழந்தது. எனவே இலங்கை அரசிடம் இன்னும் அமைச்சரவை இல்லை. தனது சொந்த அமைச்சரவையை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்காத அரச தலைவர் எவ்வாறு எதிர்க்கட்சியின் பங்களிப்புடன் பாதுகாப்பான அரசாங்கமொன்றை அமைக்க சந்தர்ப்பம் வழங்க முடியும்.

எனவே அரச தலைவர் பதவி விலகுவது மட்டுமன்றி அரச தலைவரின் சில விசேட அதிகாரங்களை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச்சட்டத்தையும் நீக்கி 19ஆவது திருத்தச்சட்டத்தையும் இன, மத, கட்சி பேதமின்றி எமது நாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அரசும் இதில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மற்றபடி இதிலிருந்து நாம் தப்ப முடியாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நாட்டில் பொதுவான ஒருமித்த கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.