தற்போதைய நிலை நீடித்தால் நாம் வாழ்வதற்கு ஒரு நாடு இருக்காது! அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமரை தெரிவு செய்ய வேண்டும்!

0
529

நாட்டின் புதிய பிரதமர் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நபராக இருக்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வை வழங்க முடியாத இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் முழு நாடும் ஒன்றிணைந்துள்ளது எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய நிலை நீடித்தால் நாம் வாழ்வதற்கு ஒரு நாடு இருக்காது என்றார்.

மதகுருமார்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் முன்மொழிவுக்கு சாதகமான முறையில் பதிலளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 10ம் திகதி ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் முடிவை வெளியிட முடியாது, ஏனெனில் அது முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வருவது பயனற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஏனெனில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், குறுகிய காலத்திற்குள் புதிய அரசாங்கத்தை நியமிப்பது சாத்தியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திற்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தினால் சிறு பிரச்சினைகளை கூட அரசாங்கத்தால் தீர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.