நிறைவேற்று அதிகாரத்தை நீக்குமாறு தமிழ் கட்சிகள் கோரிக்கை

0
382

 நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் எல்லையற்ற அதிகாரங்களுடன் கூடிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என வடக்கின் அரசியல் கட்சிகள் ஆலோசனை முன்வைத்துள்ளன.

தற்போதைய நாட்டின் அமைதியின்மையைத் தணிக்கவும், அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும், மக்கள் இயல்பு வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கும், தற்போதைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி, நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளிக்கும் முறைக்கு செல்லுமாறு ஆறு தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் ஆட்சியதிகாரம் தனி நபரின் கட்டுப்பாட்டில் உள்ளமையே முக்கிய காரணம் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என். ஸ்ரீகாந்தா ஆகியாரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளமையினால் அனைத்துத் தரப்பு மக்களினதும் அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள், பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணக் கோரி, குறிப்பாக சுகாதாரம், உணவு, கல்வி ஆகிய துறைகளில் நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலைமையை அரசாங்கமும் ஏனைய அரசியல் கட்சிகளும் சரியாக புரிந்து கொள்ளாவிட்டால் நாடு முழுவதும் அராஜக நிலை ஏற்படும் என ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

“மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வில்லாத நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. எனவே அதனை இல்லாதொழித்து நாடாளுமன்ற முறைமை மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.