தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத PHI ஐ அறைந்த பிரதி மேயர்

0
543

தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததன் காரணமாக மொரட்டுவை பிரதி மேயர் தனது காதில் அறைந்ததாக மொரட்டுவை மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் யசந்த ருவன்சிறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் (09) களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பவுசரில் இருந்து மலம் அகற்றும் பணிக்காக பிரதி மேயர் தம்மை தொலைபேசியில் அழைத்த போதிலும் அவர் கடமையாற்றிய இடத்திலிருந்து வந்த அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என பொது சுகாதார பரிசோதகர் யசந்த ருவன்சிறி தெரிவித்தார்.

மாநகர சபை அலுவலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காதது ஏன் என வினவிய பிரதி மேயர், காதில் தாக்கியதோடு ஆடைகளை கிழித்ததாகவும் மொரட்டுவை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகரை தாக்கியமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்பொதுச் சுகாதார பரிசோதகர் தம்மைத் தள்ளிவிட்டதாக பிரதி மேயரும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக மொரட்டுவை பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்த இரு தரப்பினரும் அழைக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.