பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல் இன்று!

0
46

பிரான்சில் ஜனாதிபதித் தேர்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிலையில் தற்போதைய ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron) மரீன் லே பென் (Marine Le Pen) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

கடந்த தேர்தலில் காணப்பட்டதைப் போன்று அல்லாமல் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மக்ரோன் உக்ரேனிய விவகாரத்தைக் கையாண்ட விதம் அவருக்கு ஆதரவை அதிகரித்திருக்கிறது. வலுவான பொருளாதார மீட்சியும் சிதறிக் கிடக்கும் பலவீனமான எதிர்த்தரப்பும் அவருக்குச் சாதகமான அம்சங்களாக உள்ளன.

எனினும் ஓய்வு வயதைக் கூட்டியதும் உயர்ந்து வரும் பணவீக்கமும் மக்ரோனுக்குப் பாதகமாக உள்ளன.

தீவிர வலசாரியான எதிர்த்தரப்பு வேட்பாளர் லே பென் ஐரோப்பாவுக்கு முதலிடம் தரவேண்டும் என்று விரும்புபவர். அவா் பிரான்ஸ் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

எனினும் முதல் சுற்று கருத்துக் கணிப்புகள் மக்ரோன் சிறிய வாக்கு வித்தியாசத்தில் முன்னணி பெறுவார் எனத் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு (0600 GMT) தொடங்கி மாலை 6 மணிக்கு (1800 GMT) முடிவடைகிறது,

இந்நிலையில் நாங்கள் வெற்றியை எதிர்பார்த்து தயாராக இருக்கிறோம். பிரெஞ்சு மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள் என வியாழன்று இடம்பெற்ற பிரசார பேரணியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய லே பென் கூறினார்.

மிகவும் மோசமாக ஆட்சி செய்தவர்களுக்கு நியாயமான தண்டனையை வழங்குவதற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை அவர் வலியுறுத்தினார். 44 வயதான மக்ரோன் 2017 முதல் பதவியில் இருக்கிறார். லே பென்னின் செல்வாக்கையும் அவரது கட்சியின் செல்வாக்கையும் மக்கள் மத்தியில் குறைக்கும் வகையில் தனது பிரச்சாரங்களை மக்ரோன் முன்னெடுத்தார்.

லே பென்னின் அடிப்படைக் கோட்பாடுகள் மாறவில்லை. அவரது கோட்பாடுகள் சமூகத்தை பிளவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு இனவெறி திட்டத்தை வெளிப்படுத்துகிறது. இது மிகவும் ஆபத்தானது என மக்ரோன் தெரிவித்தார்.

எனினும் தன் மீதான இனவெறி குற்றச்சாட்டுகளை லே பென் நிராகரித்துள்ளார். எனது கொள்கைகள் அனைத்து பிரெஞ்சு மக்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் கூறுகிறார்.

இவ்வாறான தீவிர பிரச்சாரங்களுக்கு மத்தியில் பல இடதுசாரி வாக்காளர்கள் மக்ரோனுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளதாக முதல் சுற்று கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன.

இந்நிலையில் அவர்களது மனதை மாற்றி தனக்கு வாக்களிக்க அவர்களை வற்புறுத்த வேண்டிய நிலை மக்ரோனுக்கு உள்ளது. மக்ரோனும் லே பென்னும் ஒருவருக்கொருவர் கடும் போட்டியாக இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.

எனது வெற்றி சாத்தியமானதே என வியாழக்கிழமை தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய லே பென் நம்பிக்கை தெரிவித்தார். தனது வெற்றி குறித்து நம்பிக்கை வெளியிட்ட மக்ரோன், அதேநேரம் லே பென்னை குறைத்து மதிப்பிட வேண்டாம் என தனது ஆதரவாளர்களை எச்சரித்தார்.