இலங்கைக்கு காலக்கெடு விதித்த சீனா!

0
334

இலங்கை பொருளாதார நெருக்கடியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இலங்கைக்கு கொடுத்த கடனின் ஒரு பகுதியை சீனா திருப்பி கேட்டுள்ளது.

பொதுவாக பல நாடுகளுக்கு, முக்கியமாக தெற்காசிய நாடுகளுக்கு சீனா அதிகமாக கடன் கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளது. பெல்ட் அண்ட் ரோட் திட்டம் மூலம் பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்யும்.

இதற்கு கடனாக பல மில்லியன்களை சீனா அந்த நாடுகளுக்கு கொடுக்கும். இந்த நிலையில் அந்த நாடுகள் கடனை திருப்பி கொடுக்க முடியாத நிலையில், அந்த நாடுகளின் பல்வேறு வளங்களை சீனா கட்டுப்படுத்தும்.

கடன் பெற்ற துறைமுகம் போன்ற இடங்களை சீனா கையகப்படுத்தும். சீனாவின் இந்த செயலை debt trap policy என்பார்கள். பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி, அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி தற்போது பொருளாதார ரீதியாக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இந்த கடனும் முக்கிய காரணம் ஆகும். 1948க்கு பின்பாக இலங்கை மிக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அதாவது தங்கள் கடல் எல்லையில் இறக்குமதி தயாராக இருக்கும் கச்சா எண்ணெய்யை வாங்க கூட இலங்கையிடம் டாலர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை இந்தியாவிடம்தான் உதவி கேட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து இலங்கைக்கு இந்தியா 2.4 பில்லியன் டாலர் கொடுத்து உதவி உள்ளது. அதோடு 400 மில்லியன் டாலர் பரிமாற்றத்தை மேற்கொண்டுள்ளது. மேலும் 500 மில்லியன் டாலர் கடனை பின்பு செலுத்தும்படி ஒத்தி வைத்துள்ளது. அதாவது இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடனை இப்போது திருப்பி செலுத்த வேண்டாம் என்று இந்தியா பெருந்தன்மையாக கூறியுள்ளது.

இன்னொரு பக்கம் 1 பில்லியன் டாலருக்கு மருந்து, உணவு உட்பட பல்வேறு உதவிகளை வழங்கவும் முடிவு செய்துள்ளது. ஆனால் இலங்கைக்கு கடுமையாக கடன் கொடுத்து அந்த நாட்டை கட்டுப்படுத்தி வந்த சீனா தற்போது கடனை கேட்டு கழுத்தை நெருக்கி உள்ளது. சீனாவிடம் இலங்கை வாங்கிய மொத்த கடன் 8 பில்லியன் டாலர்.

இலங்கையின் மொத்த கடனே 45 பில்லியன்தான். இதில் ஆறில் ஒரு பங்கு சீனாவிடம் வாங்கப்பட்ட கடன். இதெல்லாம் டாலரில் வாங்கப்பட்ட கடன். இதனால் டாலரில் சீனா வட்டியை செலுத்தி வந்தது. இதில் டாலராக மட்டும் 6 பில்லியன் டாலரை சீனாவிற்கு இலங்கை கொடுக்க வேண்டும். அதோடு தங்க நகை பத்திரமாக 1 பில்லியன் டாலரை கொடுக்க வேண்டும்.

இந்த கடன் கால அவகாசம் வரும் ஜூலை மாதத்தோடு முடிகிறது. அதற்குள் இந்த தங்க நகை பத்திரத்தின் கடனை சீனாவிடம் இலங்கை அடைக்க வேண்டும். இந்தியாவை போல சீனா இந்த கடனை பின்பு செலுத்துங்கள் என்று பெருந்தன்மை காட்டும் என்று இலங்கை நினைத்தது.

ஆனால் சீனாவோ கடன் செலுத்தும் தேதியை தள்ளிவைக்கும் பேச்சுக்கே இடமில்லை. கடன் முதிர்ச்சி திகதி வந்துவிட்டது.. கடனை ஜூலை மாதம் கொடுத்தே தீர வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது.

அப்படித்தான் இலங்கையிடம் சீனா மேலும் ஆசை காட்டி வருகிறது. முந்தைய கடனுக்கே ஜூலை மாதம் கடன் அடைக்க வேண்டிய நிலை உள்ள போது சீனா மேலும் 1 பில்லியன் டாலரை இலங்கைக்கு வழங்க சீனா முடிவு செய்துள்ளது.

இது முழுக்க முழுக்க கடன்தான். உதவி கிடையாது. ஏற்கனவே இலங்கை கடுமையான கடன் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில்தான் சீனா மேலும் கடன் கொடுத்து இலங்கையை சிக்க வைக்க முயன்று வருகிறது.

ஏற்கனவே இலங்கை மேற்கொண்ட கட்டுமானத்தால் எந்த வருமானமும் வராத நிலையில்தான் இந்த புதிய கடனையும் இலங்கை சீனாவிடம் இருந்து கூடுதலாக வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை இலங்கை கொடுக்க முடியாத பட்சத்தில் சீனா இதற்கு ஈடாக வேறு இழப்பீடுகளை கேட்கும் வாய்ப்புகள் உள்ளன.