புலிகளின் தலைவர் பிரபாகரனின் கனவு நனவாகுமா?

0
35

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆங்கில படங்களை விரும்பி பார்க்கும் ஒருவர். இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றி இருந்த போது, அவருக்கு புலிகளின் பிரசாரப் பிரிவிடம் இருந்து ஒரு ஆங்கில படத்தின் வீடியோ கிடைத்துள்ளது.

பிரபல ஹொலிவூட் ஆங்கில திரைப்பட நடிகரான கிளின்ட் ஈஸ்ட்வுட், பிரபாகரனுக்கு மிகவும் பிடித்த நடிகர். கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த திரைப்படங்களை பார்த்தே தான் தற்காப்பு கலையை கற்றுக்கொண்டதாக பிரபாகரன் ஊடக சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.

இதனை பார்த்த கிளின்ட் ஈஸ்ட்வுட் தன்னை பார்த்து தற்காப்பு கலையை கற்றுக்கொண்ட மகிழ்ச்சி எனவும் போரை கைவிட்டு சமாதான வழிக்கு திரும்புமாறும் பிரபாகரனிடம் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் கூறியிருந்தார்.

இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர் பிரபாகரனுக்கு கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த 300 என்ற ஹொலிவூட் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பிரபாகரன் ஏற்கனவே இந்த திரைப்படத்தை பார்த்தாரா இல்லையா என்பது தெரியவில்லை.

2009 ஆம் ஆண்டு கிளிநொச்சியை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் அவருக்கு இந்த திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படம் ஸ்பாடன்ஸ் நாட்டின் படையினர், பெர்சியா நாட்டின் தேவ மன்னரின் படையினருக்கு எதிராக போரிடுவதை கருவாக கொண்டது. இந்த போரில் ஸ்பாடன்ஸ்களின் தலைவரான லியோனிடாஸூக்கு 300 பேரை கொண்ட படையே இருந்தது.

300 பேர் கொண்ட இந்த படையணி, பயிற்சிகளை பெற்ற தற்கொலை படையணி. இந்த 300 பேர் கொண்ட படையணி, ஆயிரக்கணக்கான படையினரை கொண்ட பெர்சியாவின் தேவ மன்னனின் படைக்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இறுதியில் மன்னன் போர் களத்திற்கு செல்ல நேரிட்டது. கடவுளாலும் கை வைக்க முடியாது என்று கூறப்பட்ட இறவா வரம் கொண்ட படையினருடன் அவர் போர் களத்திற்கு செல்கிறார். ஸ்பாடன்ஸூகளின் ஒற்றன் ஒருவன் வழங்கிய இரகசியமான வழியில் தேவ மன்னன் போருக்கு செல்கிறார்.

எனினும் ஸ்பாடன்ஸ் தலைவரான லியோனிடாஸ், இறாவா படையணி தப்பியோடும் அளவுக்கு தாக்குதல் நடத்துவதுடன் தேவ மன்னனின் தளபதியை கொலை செய்து, மன்னருக்கு காயத்தை ஏற்படுத்துகிறார்.

இதனையடுத்து மன்னனின் ஆயிரக்கணக்கான படையினர் தன்னை சுற்றிவளைத்த போது தன்னால் வெற்றி பெற முடியாது என்பதை லியோனிடாஸ் புரிந்துகொள்கிறார்.

300 பேர் கொண்ட படையணியை சேர்ந்த ஒருவரை தப்பிச் செல்லுமாறு பணிக்கின்றார். ஸ்பாடன்ஸ் நாட்டுக்கு சென்று அங்கிருக்கும் தனது தாய் மற்றும் நாட்டு மக்களிடம் 300 பேர் செய்த தியாகத்தை கூறுமாறும் என்றாவது ஒரு நாள் இந்த தியாகத்திற்காக பெர்சியாவின் மன்னனை பழிவாங்குமாறும் ஆலோசனை வழங்குகிறார்.

ஸ்பாடன்ஸ் படையினர், பெர்சிய படையினர் மீது தற்கொலை தாக்குதல் நடத்தி கொல்லப்படுகின்றனர். தலைவனின் ஆலோசனைபடி தப்பிச் சென்ற நபர், இரத்தத்தினால் செய்த தியாகத்தை ஸ்பாடன்ஸ் நாட்டு மக்களிடம் கூறிய போது மக்கள் அதில் உணர்ச்சிவசப்பட்டு பெர்சியாவின் மன்னனை தோற்கடித்து போரில் வெற்றி பெற படையில் இணைய விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ஒரு வருடத்திற்கு பின்னர் ஸ்பாடன்ஸ் படையினரிடம் பெர்சியா தேவ மன்னனின் படை படுதோல்வி அடைகின்றது. இந்த திரைப்படத்தை பார்த்த புலிகளின் தலைவர், சரணடையாது தற்கொலை தாக்குதல் நடத்த தயாராகுங்கள் என புலிகளின் ஏனைய தலைவர்களுக்கு அறிவித்ததாக போருக்கு பின்னர் கைது செய்யப்பட்ட புலிகளின் பிரதேச தலைவர் ஒருவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் கூறியிருந்தார்.

300 என்ற இந்த ஆங்கிலப் திரைப்படத்தை புலிகளின் அனைத்து முகாம்களிலும் திரையிட்டு காட்டுமாறும் ஸ்பாடன்ஸ் படையினரின் தியாகம் பற்றி கூறுமாறும் பிரபாகரன் ஆலோசனை வழங்கி இருந்தாக இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு பின்னர் தகவல் கிடைத்திருந்தது.

முள்ளிவாய்க்காலில் தெரிவு செய்யப்பட்ட திறமையான புலிகளின் போராளிகள் அந்த தியாகத்திற்கு தயாரானதாக கைது செய்யப்பட்ட புலிகளின் பிரதேச தலைவர் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்து தற்போது 13 வருடங்கள் கடந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் அவர் கொல்லப்பட்டதாக இராணுவம் கூறியது.

இது நடந்து சரியாக 10 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் நாளில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை பயன்படுத்தி, பிரபாகரனை கொன்று விட்டதாக கூறிய போருக்கு தலைமை தாங்கிய ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.

300 என்ற ஆங்கில திரைப்படத்தை பார்த்த புலிகளின் தலைவர் முள்ளிவாய்க்கல் இறுதிக்கட்ட போருக்கு பின்னர் சர்வதேச சமூகம் வந்து, தமிழ் மக்களுக்கு தீர்வையும் கொல்லப்பட்ட புலிகளின் உறுப்பினர்களின் உயிருக்கும் பெறுமதியை பெற்றுக்கொடுக்கும் என எண்ணி இருக்கலாம்.

கடந்த 13 ஆண்டுகளாக உலக நாடுகளில் உள்ள புலம்பெயர் அமைப்புகள் இதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால், சர்வதேச தலையீடு ஒன்று ஏற்பட்டிருக்கும். மைத்திரி – ரணில் வெற்றியால் அது தவிர்க்கப்பட்டது.

எனினும் 13 ஆண்டுகளுக்கு பின்னர் புலிகளின் தலைவர் பிரபாகரன் எண்ணியது போல் ராஜபக்சவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர். 2009 ஆம் ஆண்டு போருக்கு தலைமை தாங்கிய அன்றைய பாதுகாப்பு செயலாளரே தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

கோட்டாபயவின் ஆட்சியின் கீழ் இலங்கையின் தென் பகுதி மக்கள், போர் காலத்தில் வடக்கில் மக்கள் வாழ்ந்தது போல் வாழ்ந்து வருகின்றனர். அந்த காலத்தில் வடபகுதியில் எரிபொருள் இல்லை, சமையல் எரிவாயு இல்லை. மின்சாரமும் இருக்கவில்லை. மண் எண்ணெய் குப்பி விளக்குகளே இருந்தன.

தற்போது தெற்கில் மண் எண்ணெய் இல்லை. தென் பகுதி மக்கள் பாண் என்ற வார்த்தையை கூற முடியாத அளவுக்கான பொருளாதார கஷ்டத்தில் இருக்கின்றனர். இதனால், அவர்கள் “கோட்டா வெளியேறு” என்று கூறுகின்றனர்.

இந்த நேரமே சூழ்ச்சிக்கான சரியான நேரம். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சிறந்த தருணம். இதனை அறிந்து கொண்டுள்ள ராஜபக்சவினர், 2015 ஆம் ஆண்டு ராஜபக்சவினருக்கு எதிரான சூழ்ச்சியின் தாய் மற்றும் தந்தையான இந்தியா மற்றும் அமெரிக்காவின் வாலை பிடித்து தொங்க முயற்சித்து வருகின்றனர்.

ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்பதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா கூறும் எதனையும் செய்ய ராஜபக்சவினர் தயாராக இருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் “நான் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றேன்” எனக் கூறிய கோட்டாபய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து “ என்னை நம்புங்கள், உங்களது கோரிக்கையை நான் நிறைவேற்றுவேன்” இதற்காகவே கூறினார்.

அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலன்ட்டை சந்தித்த கோட்டாபய, புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.

அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் இலங்கையை விட்டு புறப்பட்டதும் கோட்டாபய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தார். 2019 ஆம் ஆண்டு பதவிக்கு வந்து தடை செய்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தடையை நீக்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்த கூட்டு நிதியம் ஒன்றை ஏற்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதியை பெற்றுக்கொள்வதாக கோட்டாபய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன், புலம்பெயர் தமிழ் சட்ட வல்லுநர்கள் மற்றும் 2002 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துடன் இடைக்கால நிர்வாக சபை மற்றும் 2005 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் அரசாங்கத்துடன் சுனாமி நிவாரண சபை ஆகிய யோசனைகளை உருவாக்குவதில் முதன்மையாக இருந்து செயற்பட்டவர். அத்துடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்துகொண்டவர்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அதாவது கடந்த ஆண்டில் எம்.ஏ.சுமந்திரன், கல்வியமைச்சராக இருந்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கையில் சேவையை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஹெலினாவையும் சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் பின்னர், தினேஷ் குணவர்தன வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, ஜீ.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். வெளிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னரே ஜீ.எல்.பீரிஸ் முதன் முதலில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.

இதன் பின்னர் விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கு அமைய எம்.ஏ.சுமந்திரன், அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தார். அத்துடன் அவர் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு சென்று அதன் பிரதானிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.

சுமந்திரன் இந்த விஜயங்களுக்கு முன்னர், பசில் ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டத்தின் பின் நடத்தப்பட்ட தேனீர் விருந்தில், கோட்டாபயவை சந்தித்தார். “எப்போது அமெரிக்காவுக்கு செல்கிறீர்கள்” என கோட்டாபய, சுமந்திரனிடம் கேட்டதுடன் “சென்று திரும்பிய பின் நாம் சந்திப்போம்” எனவும் கூறினார்.

அப்படியானால், ராஜபக்ச அரசாங்கத்தின் அங்கீகாரம் மற்றும் ஆசியுடனேயே சுமந்திரன், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பிரதானிகளையும் சந்தித்துள்ளார்.

இப்படியான சூழ்நிலையில்,  தடை நீக்கப்பட்ட பின்னர் 300 என்ற ஆங்கில திரைப்படத்தில் ஸ்பாடன்ஸ்கள் ஒரு வருடத்திற்கு பின்னர் பெர்சியா நாட்டில் கால் வைத்தது போல், புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இலங்கையில் கால் வைக்க போகிறார்களா?. புலிகளின் தலைவரது கனவு நனவாகுமா?. அதனையே அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

கட்டுரையாளர் – உபுல் ஜோசப் பெர்னாண்டோ

மொழியாக்கம் – ஸ்டீபன் மாணிக்கம்