ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீடு பொதுமக்களால் சுற்றிவளைப்பு! இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டம்!

0
665

சிறிலங்கா அரச தலைவர் வீடு பொதுமக்களால் சுற்றிவளைப்பு, போராட்ட குழுவை கலைப்பதற்காக கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதலை காவல்துறையினர் நடத்தினர்.

இவ்வாறு தண்ணீர் பிரயோக தாக்குதலுக்கு மத்தியிலும் மக்கள் அரச தலைவரின் இல்லத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அரச தலைவர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்துபவர்களை காவல்துறையினர் கலைக்க முற்பட்டுள்ளனர்.இதன்போது காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தப்படுகிறது. கடந்த பல மாதங்களாக இலங்கையில் நிலவி வரும் டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், எரிவாயு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு வந்தநிலையில் நேற்று முதல் 13 மணி நேர மின்சார விநியோக தடை அமுலுக்கு வந்துள்ளது. இதனையடுத்தே இன்று மக்கள் கோட்டாபயவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரச தலைவரின் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றுவரும் நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் தற்போது மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

காவல்துறையால் போடப்பட்டிருந்த தடுப்புச்சுவர் போராட்டக்காரர்களால் உடைக்கப்பட்ட நிலையில் விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்படுள்ளனர். இதேவேளை குறித்த பகுதியில் இணைய இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகர்த்தெறியப்பட்ட காவல்துறை தடை

கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது முதலாவது காவல்துறை தடையினை தகர்த்தெறிந்து போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றுள்ளனர். இனவாதத்தையும் – மத வாதத்தையும் உருவாக்கிய குடும்பத்தை அழிக்க வேண்டும் என்று கோஷமிட்டப்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள மிரிஹான – பகிரிவத்த மாவத்தை பகுதியில் பெருமளவான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் இராணுவ வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, குறிப்பாக 13 மணி நேர மின் வெட்டு காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியின் வெளிப்பாடாக சுயமாகத் திரண்டெழுந்த மக்களே அரச தலைவரின் வீட்டின் முன்பு திரண்டு கோசங்களை எழுப்பி வருகின்றார்கள்.