நாட்டிற்கு கைகொடுக்குமா ஐ.ஓ.சி?.. மின் வெட்டு குறைக்கப்படலாம் என மின்சாரசபையின் எதிர்பார்ப்பு

0
50

 நாட்டில் தற்போது தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு காரணமாக பல தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 6000 மெட்ரிக் தொன் டீசலை மின்னுற்பத்தி நிலையங்களுக்கு வழங்க லங்கா IOC நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது.

டீசல் பற்றாக்குறை காரணமாக செயலிழக்க ஆரம்பித்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் மாத்திரமே தற்போது செயற்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டது.

ஏனைய அனைத்து அனல் மின் உற்பத்தி நிலையங்களும் தற்போது செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் ஊடகப்பேச்சாளருமான அன்ரூ நவமணி தெரிவித்தார். கெனியன் நீர் மின்னுற்பத்தி நிலையத்தில் ஒரு மின்பிறப்பாக்கி மாத்திரம் இன்று முதல் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து 810 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்பில் இன்று இணைக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.