எரிவாயுவிற்காக வரிசையில் காத்திருந்த மக்களிடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!

0
49

கொட்டகலையில் இன்று சமையல் எரிவாயுவை வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த மக்களை “நாயே” என விளித்து வர்த்தக நிலைய உரிமையாளர் திட்டியதால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் எரிபொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசைகளில் நிற்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் கொட்டகலை நகரில் இரு வர்த்தக நிலையங்கள் ஊடாகவே சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திலுள்ள உரிமையாளர், வாடிக்கையாளர்களை மதித்து நடப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தக நிலையத்திற்கு இன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வந்துள்ள போதும் சுமார் 50 பேருக்கு மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஏனையவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் சிலர் வீடுகளுக்கு திரும்பியுள்ள போதும் ஏனைய சிலர் இதனை எதிர்த்து போராடியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்திலேயே வர்த்தக நிலையத்தின் உரிமையாளர், வாடிக்கையாளர்களை நாயே என விளித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த வாடிக்கையாளர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டதையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் விஷ்வநாதன் புஷ்பாவும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நபர் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியதையடுத்து, சில வாடிக்கையாளர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.