கோட்டபாய ராஜபக்ஷவின் மூட நம்பிக்கை! மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் சாமியார்

0
422

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) மூட நம்பிக்கையே காரணமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி கோட்டாபய அனுராதபுரத்தில் ஞானக்காவின் உதவியை நாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள பொருளாதார நிபுணர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் உதவியைப் பெறுவதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ஞானக்காவின் உதவியை பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (28-03-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு ஞானக்காவே பொறுப்பு கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார். நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்கூட்டியே தீர்வுகளை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு (2022) மார்ச் மாதம் எதிர்கொள்ளப்போகும் பாரதூரமான நிலைமையை கடந்த செப்டெம்பர் மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை முன்கூட்டியே பெற்று நெருக்கடியை சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடி குறித்தும், இதன் மூலம் மக்கள் நெருக்கடிக்குள்ளாகுவதனை தடுப்பது தொடர்பிலும் ஐ.தே.க தலைவர் கூறியதை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் மாந்திரீக நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண் சாமியாரான ஞானக்காவின் தீவிர பக்தனாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ உள்ளார்.

அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மந்திரவாதி பெண்ணின் ஆலோசனைப்படி நடைபெறுவதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.