ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்! காத்திருந்து இலங்கையில் சாதித்த இந்தியா

0
291

இந்திய தேசம் இலங்கை விவகாரத்தில் காத்திருந்து உரிய நேரத்தில் தனது காய்களை சரியாக நகர்த்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அந்திய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துவிட்டது. குறிப்பாக டொலர் நெருக்கடியினால் இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலை உயர்வு உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது.

மறுபுறத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய துயரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடன் மேல் கடனாக உலக நாடுகளில் இலங்கை பெற்றுவிட்டது.

முன்னதாக சீனாவிடம் அதிகளவான கடனைப் பெற்று தற்போது சீனாவும் கைவிடும் நிலைக்குள் இலங்கை தவித்துக் கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையினை இந்திய அரசாங்கம் தமக்கு சாதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் தேசிய பாதுகாப்பை இலங்கையில் மீண்டும் கால் பதித்ததன் ஊடாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

அண்மையில் இலங்கை வந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள மூன்று தீவுகளில் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 6 புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளார்.

உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையில் நேற்றுமுன்தினம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்திய மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது. குறித்த உடன்படிக்கைகள் வருமாறு,

* காலி மாவட்டத்திலுள்ள 200 பாடசாலைகளுக்கு நவீன கணினி கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் பலகைகளை வழங்கும் வகையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கையில் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை.

* சமுத்திர பாதுகாப்பு தொடர்பு மத்திய நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு மற்றுமொரு புரிந்துணர்வு உடன்படிக்கை.

* இலங்கையிலுள்ள மீனவத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் வகையிலான உடன்படிக்கை.

* சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டு சேவை நிறுவனம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

* யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று தீவுகளில் ஐபிரிட் மின்சார திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடையே கைச்சாத்திட்டுள்ளன. இதுவொருபுறமிருக்க, முன்னர் இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் ஒரு பில்லன் கடன்களை பெற்று இருக்கிறது. அது மாத்திரமல்லாது நேற்றைய தினம் மீண்டும் ஒரு பில்லன் கடன் தொகையினை இந்தியாவிடம் கோரியிருக்கிறது இலங்கை.

வடக்கில் தமிழர் பகுதியில் இருக்கும் நைனாதீவு, அனலைதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட மூன்று தீவுகளில் ஏற்கனவே சீனா மின் உற்பத்தி தொடர்பில் பேச்சு எழுந்த போது கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. ஆனால் இலங்கைக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இந்தியா இதனை தனக்கு பெரும் சாதகமாக பயன்படுத்தியிருக்கிறது.

ஒருவேளை சீனாவிடம் இத்தீவுகள் சென்றிருந்தால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. இதனை சரியாக சரியான நேரம் கணித்து இந்தியா தன்வசப்படுத்தியிருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, இலங்கைக்கு ஏனைய நாடுகள் கடன்களைக் கொடுக்க, இந்தியா மானியம் மற்றும் பொருட்களையும், எரிபொருள் சிக்கலுக்கு தீர்வையும் பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறது.

கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலமாக இந்தியா தனது கடல் வளத்தையும் தன்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆக, இந்தியா அண்டை நாடான இலங்கையில் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு அல்லது கடந்த காலங்களில் பெற முடியாததை தற்போதைய நெருக்கடி நிலையை சாதமாகப் பயன்படுத்தி மீண்டும் இராஜதந்திர ரீதியில் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூற முடியும்.

எவ்வாறாயினும் நீண்ட காலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், இலங்கையை சரிவிலிருந்து மீட்பதாக வாக்குறுதி கொடுத்து, தனது தேசிய பாதுகாப்பையும், கடல் சார் பாதுகாப்பையும் இந்தியா காப்பாற்றியிருக்கிறது என்பது மாத்திரமல்லாது சீனாவின் அச்சுறுத்தலையும் ஓரளவுக்கு தற்போது தடுத்திருக்கிறது என்றே சொல்ல முடியும்.

இந்தியாவை கைவிட்டு சீனாவிடம் சென்ற இலங்கைக்கு மீண்டும் தவிர்த்துக்கொள்ள முடியாத நிலையில், இந்தியாவிடம் தஞ்சமடையும் நிலைக்கு காலம் கொண்டுவந்து விட்டிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.