ரஷ்ய எரிசக்தியை பெறும் நட்பற்ற நாடுகள் அதற்கான கொடுப்பனவை ரூபிளில் செலுத்த வேண்டுமென்ற புடினின் கோரிக்கையை ஜி 7 என அழைக்கப்படும் நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன.
ஜேர்மனியின் எரிசக்தி அமைச்சர் ரொபேர்ட் ஹேபெக் இன் தகவலின்படி, ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதிக்கு ரூபிள் செலுத்த வேண்டும் என்ற மொஸ்கோவின் கோரிக்கையை உலகின் ஏழு பணக்கார நாடுகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர்.
ஜி7 நாடுகள் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவையே அவையாகும்.
புடினின் இந்த கோரிக்கை “தற்போதுள்ள ஒப்பந்தங்களின் தெளிவான மீறல்” என்று அவர் தெரிவித்தார். “ரூபிளில் பணம் செலுத்துவது ஏற்கத்தக்கது அல்ல, புடினின் கோரிக்கையைப் பின்பற்ற வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்துவோம்” என்றார்.
“நட்பற்ற” நாடுகள் இயற்கை எரிவாயுவை இனி ரஷ்ய நாணயத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாக புடின் கடந்த வாரம் அறிவித்தார்.
பொருளாதார வல்லுநர்கள் இந்த நடவடிக்கை ரூபிளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாகத் தோன்றுவதாக தெரிவத்திருந்தனர்.
24 பெப்ரவரி அன்று புடின் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து மற்ற நாணயங்களுக்கு எதிராக ரூபிள் பாரிய சரிவைக் கண்டுள்ளது.மற்றும் மேற்கத்திய நாடுகள் மொஸ்கோவிற்கு எதிராக நீண்டகால தடைகளை விதித்துள்ளமைமையும் குறிப்பிடத்தக்கது.