பாட்டலி மற்றும் மைத்ரிபால ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பாதகமான நீதிமன்ற உத்தரவுகள்!

0
267

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விபத்துச் சம்பவத்தின் சாட்சியங்களை விசாரணை செய்வதிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்தை தடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்து பொய்யான சாட்சியங்களை தயாரித்ததாக குற்றம் சுமத்தி கொழும்பு மேல் நீதிமன்றில் தம்மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சிய விசாரணையை இடைநிறுத்துமாறு கோரியே நாடாளுமன்ற உறுப்பினர் இந்த மீளாய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

எனினும் இந்த மீளாய்வு மனு நீதியரசர்களான மேனகா விஜேசுந்தர மற்றும் எஸ்.குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கொழும்பு 07 பேஜெட் வீதியில் வீடொன்றை வழங்குவதற்கான அமைச்சரவை தீர்மானத்தை உயர் நீதிமன்றம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தியது.

இந்த உத்தரவு இன்றில் இருந்து நான்கு வாரங்களுக்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் என்றும், இந்த இடைக்கால உத்தரவு மனு விசாரணைக் காலம் வரை அமுலில் இருக்கும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, யசந்த கொடகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் (CPA) மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பைக்கியசோதி சரவணமுத்து ஆகியோர், இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அமைச்சரவை இந்த வீட்டை வழங்கிய விதம் அரசியலமைப்புக்கு முரணானது என குற்றஞ்சாட்டியே இந்த மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.