சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்! – சுற்றுலா அமைச்சகம் அறிவிப்பு

0
275

உக்ரைன் – ரஷ்யா போரின் விளைவாக சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க இந்தியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுத்து சுற்றுலாத்துறையை நிலைநிறுத்துவதற்கு பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்றின் அவசியத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுற்றுலாத்துறை தொடர்பான குறிப்பொன்றை சமர்ப்பித்த அமைச்சர், எரிசக்தி நெருக்கடியால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நேற்று முன்தினம் வரை 274,211 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மார்ச் 1 முதல் மார்ச் 27 வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 95,377 ஆகும்.

இந்த வருட இறுதிக்குள் சுற்றுலாத்துறையானது 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும், இந்த இலக்கை அடைவதன் மூலம் இலங்கை தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க உதவும் எனவும் அமைச்சர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.