தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ள செல்வம் அடைக்கலநாதன்!

0
312

இலங்கையில் வாழ முடியாதென்று இந்தியா செல்லும் உறவுகள் தொடர்பில் ஈழ அகதிகளுக்கு உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணமாகவே மக்களுடைய தொழில் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பிள்ளைகளுக்கு சரியான முறையில் உணவு கொடுக்க முடியவில்லை. அவ்வாறான ஒரு பிரச்சினை இலங்கை நாட்டிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

 ஒவ்வொரு நிமிடமும் உணவு பொருட்களின் விலை மிக உயர்வடைவதனால் அன்றாடம் உழைக்கின்றவர்கள் பட்டினியை எதிர் கொள்கின்ற நிலை உருவாகி இருக்கின்றது. அதனால் இந்தியா செல்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அது தவிர்க்க முடியாதது என்றே கூறுகின்றேன். ஏனென்றால் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கவில்லை என்றால் தாய், தந்தை அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தான் யோசிப்பார்கள்.

ஆகவே, இலங்கையில் பட்டினியால் இறப்பதை விட இந்தியா செல்வது சட்டவிரோத செயற்பாடாக இருந்தாலும் கூட, அவ்வாறான ஒரு செயற்பாட்டை மக்கள் செய்வது அந்த காரணங்களை வைத்து கொண்டு தான். எனவே இந்திய அரசாங்கம் அங்கே வருபவர்களை முகாம்களில் தங்க வைத்திருப்பதாக அறிகின்றேன். அந்தவகையில் முதலமைச்சருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

 இலங்கையில் வாழமுடியாதென்று இந்தியா வரும் உறவுகளை நீதிமன்றத்தினை அணுக வைத்து சிறப்பு முகாம்களில் அடைக்காது, மக்கள் தங்கியிருக்கின்ற முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நான் முதலமைச்சரிடம் முன் வைக்கின்றேன்” என்றார்.