முறையான அபிவிருத்தியை வேண்டுகிறோம்! முனைத்தீவு கிராம மக்கள் தெரிவிப்பு

0
277

அபிவிருத்தியில், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வாழ்வாதாரம், உள்ளிட்ட பல விடயங்களையும், தொட்டுச் செல்லும் வகையில் சென்றால்தான் கிராமங்களும் எதிர்காலத்தில் நகரங்களாக மாற்றமடையும், ஆகவே முறையான அபிவிருத்தியை வேண்டுகிறோம் என போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முனைத்தீவு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

”காலத்திற்குக் காலம் அரசாங்கங்கள் மாறினாலும், கிராமங்கள் முதல் நகரங்கள் வரையிலான அபிவிருத்திச் செயற்பாடுகளில் அரசகொள்கையில் மாற்றமில்லாத நிலையான செயற்றிட்டங்கள் கற்றறிந்தோர் மட்டத்தில் தீட்டப்படல் வேண்டும்.

அவ்வப்போது பெய்யும் மழைக்கு முளைக்கும் காளான்போல் மாறி மாறி அரசியல்வாதிகள் உருவாகினாலும் முனைத்தீவு போன்ற கிராமங்களில் அபிவிருத்தி என்பது எட்டாக்கனியாகவே அமைந்து விடுகின்றன” இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் முனைத்தீவு தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் நா.சிவலிங்கம் தெரிவிக்கையில்,

நான் இக்கிராமத்தில் முன்னர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவராக இருந்தபோது சிறிய மழைக்கும் எமது கிராமம் காணப்படும் நிலைமை தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரை அழைத்து வந்து காண்பித்தேன்.

எனவே கிராமத்தில் மழைக்காலத்தில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு முறையான வடிகான் வசதி அமைக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கையைப் பிரதேச செயலாளரிடம் நாம் முன்வைத்தோம்.

அதனை பிரதேச செயலாளரும் ஏற்றுக்கொண்டு அதற்குரிய திட்டங்களை வடிவமைத்துள்ளார்கள். எனினும் அது இதுவரையில் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கிராமத்தில் புதிதாக வீதிகள் செப்பனிடப்பட்டுள்ளன.

ஆனாலும் அந்த வீதிகளுக்குக் குறுக்காகக் குழாய்கள் அமையப்பெறாத காரணத்தால் வெள்ளநீர் வழிந்தோட முடியாத அளவிற்கு வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. திட்டமிடப்படாத அபிவிருத்திகளால் தான் இவ்வாறு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஒரு வளவினுள் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற முயன்றால் அருகிலுள்ள ஏனைய வீடுகளுக்குள்ளும் அது பாய்கின்றது. இதனால் பல சமூக பிரச்சனைகளும் கிராமத்தில் தோன்றுகின்றன.

இவ்வாறு மழை விட்டாலும் நீர் தேங்கி நிற்பதனால் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கும் தொற்று நோய்களுக்குட்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கிராமத்தில் தேங்கிக்கிடக்கும் நீரை எவ்வாறாவது வெளியேற்ற வேண்டும் என மக்கள் மத்தியிலும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் இல்லாமலுள்ளது” இவ்வாறு கூறியுள்ளார்

இது தொடர்பில் முனைத்தீவு தெற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெ.புவிதாஸ் தெரிவிக்கையில்,

எனக்கு தற்போது 30 வயதாகின்றது. எனது வயதுக்கு எட்டிய வகையிலும், எமது கிராமத்திலுள்ள பெரியோர்களின் கருத்துகளின் அடிப்படையிலும், கடந்த காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எமது முனைத்தீவுக் கிராமமும் ஒன்றாகும்.

இது அன்றுதொட்டு இன்று வரையில் அதே நிலைமையில்தான் காணப்படுகின்றது. எமது கிராமத்தில் 60இற்கு மேற்பட்ட வீதிகள் உள்ளன. ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எமது கிராமத்தில் வெறுமனே 88மீற்றர் வீதி மாத்திரம்தான் 2 வருடத்தில் செப்பனிடப்பட்டுள்ளது.

ஒருசில வீதிகளைத் தவிர ஏனைய வீதிகள் அனைத்தும் சேறும் சகதியுமாகத்தான் காணப்படுகின்றன. இதனால் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலதரப்பட்டோரும் அசௌகரியங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

தொடர்ச்சியாக நாம் இவ்வாறு வாழமுடியாது. எமது கிராமத்தில் மாற்றம் வரவேண்டும்.

வடிகான் வசதிகளை ஏற்படுத்தித்தர அரசியல் பேதங்களுக்கு அப்பால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள், அனைவரும் எமது கிராமத்திற்கு நேரடியாக வந்து எமது மக்கள் படும் இன்னல்களைக் கண்ணுற்று தேவைகளை முன்னுரிமைப்படுத்தித் திட்ட முன்மொழிவுகளை வடிவமைத்து அவற்றை நிறைவேற்றித் தருவதற்கு, உடனடியாக முன்வர வேண்டும் என எமது கிராம மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.

மேலும் பழம்பெரும் கிராமமான எமது கிராமத்தில் தற்போதைய நிலையில் 60இற்கு மேற்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளனர்.

பொற்றொழிலை மாத்திரம் நம்பி வாழும் எமது கிராம மக்கள் தற்கால சூழலில் பொற்றொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகக் கிராமத்திலுள்ள அனைவரும் தத்தமது தொழில்களை இழந்த நிலையில் காணப்படுவது வேதனையளிக்கின்றது.

இதனால் மக்கள் ஏனைய கூலி வேலைகளை நாடிச் செல்கின்றன. எனவே அரசாங்கம் கிராம மட்டத்தில் ஏனைய வாழ்வாதார உதவித்திட்டங்களை நல்ல முன்வரவேண்டும். எமது கிராமத்தில் உப தபாலகம் அமைந்துள்ளது. அது தனியார் கட்டடத்தில்தான் இயங்கி வருகின்றது.

எனவே கிராமத்தில் அரச காணி இருந்தும் சிறியதொரு கூட்டம் நடாத்துவதற்கும் கட்டட வசதி இல்லாமலுள்ளது. எனவே பொதுக்கூடம் ஒன்று அமையப் பெறும் பட்சத்தில் அதில் கைத்தொழில் பயிற்சிகள், உபதபாலகம், கூட்டங்கள் கூடுதல், போன்றவற்றுக்கு உபயோகப்படுத்தலாம்.

இப்பகுதிக்குரிய ஆயுர்வேத வைத்தியசாலை எமது கிராமத்தில்தான் அமைந்துள்ளது. அதுபோல் இங்கு காணப்படுகின்றது. ஆயுர்வேத வைத்தியசாலையும், பொது நூலகமும் தரமுயர்த்தப்படல் வேண்டும். ஒட்டு மொத்தமாக எமது கிராமம் அபிவிருத்தியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவே எமது கோரிக்கையாகும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ம.சுகிகரன் தெரிவிக்கையில்,

எனது வட்டாரப்பிரிவுக்குள் முனைத்தீவு, பட்டாபுரம், பெரியபோரதீவு, புன்னக்குளம் ஆகிய 4கிராமங்கள் உள்ளடங்குகின்றன. முனைத்தீவு கிராமத்தில் வருடாந்தம் மழை காலத்தில் இவ்வாறான நிலைமை வருவதாகத்தான் உள்ளது.

எனினும் எமது பிரதேசபையில் நிதிவளம் மிகவும் குறைவு, இருந்த போதிலும் நாம் முனைத்தீவில் வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி அகற்றுவதற்கும், ஒரு வீதியில் குழாய் அமைத்து நீரை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

திட்டங்கள் வரும்போது ஏனைய வடிகான் வசதிகளை மேற்கொள்ளவுள்ளோம். இருந்தபோதிலும் அரசாங்கத்தினால் ஒரு பிரதேச சபை உறுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4 மில்லியன் நிதியில் எமது வட்டாரத்திலுள்ள 4கிராமங்களுக்கும் தலா 10இலட்சம் வீதம் பகிர்ந்து அதில் வீதி மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல விடயங்களை அபிவிருத்தி செய்வதற்குத் திட்ட முன்மொழிவுகளை அனுப்பி வைத்துள்ளேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகிகரன் இவ்வாறு கருத்துத் தெரிவிக்கின்ற போதிலும், முனைத்தீவு கிராமத்தில் பல்கிப் பெருகியிருக்கின்ற மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்குச் சிறிய சிறிய ஒதுக்கீடுகள் யானை பசிக்கு சோளம் பொரி போன்றுதான் உள்ளது.

எனவே மக்களின் வரிப்பணத்தில் வேதனம் பெறும் அதிகாரிகளும், காலத்திற்குக் காலம் கைகூப்பி வாக்குப் பெறும் மக்கள் பிரதிநிதிகளும் முனைத்தீவு கிராமத்திலுள்ள தேவைகளைப் பகுப்பாய்வு செய்து ஒவ்வொன்றுக்கும் திட்ட வரைவுகளை இலங்கை அரசாங்கத்திடமும், வெளிநாடுகளின் தூதரகங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் போன்றவற்றை அணுகி ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் பட்சத்தில் அம்மக்கள் சொகுசு வாழ்க்கைக்கு வித்திடா விட்டாலும், ஓரளவு நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வார்கள் என்பதுவே அக்கிராம மக்களின் அயராத எதிர்பார்ப்பு.