சர்வதேச பயணம் செய்வதில் கனேடியர்களுக்கு உருவாகியுள்ள தடைகள்: திடிர் முடிவுக்கான காரணம் என்ன?

0
368

பெருந்தொற்று பிரச்சினை காரணமாக சர்வதேச பயணம் செல்வதற்காக காத்திருந்த கனேடியர்கள், இப்போது வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், மீண்டும் காத்திருக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத்துறையின் கூற்றுப்படி, பாஸ்போர்ட் ஒன்று பரிசீலிக்கப்படுவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலகட்டம், விண்ணப்பதாரர் நேரடியாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் ஐந்து நாட்கள், தபால் மூலம் விண்ணப்பித்தால் 17 நாட்கள் (அலுவலகம் இயங்கும் நாட்கள்).

தற்போது மீண்டும் கனடாவிலிருந்து வெளிநாட்டுப் பயணங்கள் துவங்கியுள்ள நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாஸ்போர்ட் கோரி அல்லது பாஸ்போர்ட் புதுப்பிக்கக் கோரி விண்ணப்பிக்கிறார்கள்.

2021 ஏப்ரல் முதல், இதுவரை 1.2 மில்லியன் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. பெருந்தொற்று காலகட்டத்திலோ (2020 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை) 363,000 பாஸ்போர்ட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன.

ஆனாலும், இந்த எண்ணிக்கை, பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிட்டால் குறைவுதான். காரணம், 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை 2.3 மில்லியன் பாஸ்போர்ட்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன!

பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாயிற்று. சரி, இப்போதாவது வெளிநாட்டுப் பயணம் செல்லலாம் என திட்டமிட்ட கனேடியர்கள், தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தாமதமாவதால் விரக்தியடைந்துள்ளார்கள்.

ஆகவே, அப்படி யாருக்காவது இரண்டு அலுவலக நாட்களுக்குள் பாஸ்போர்ட் தேவையானால், அருகிலுள்ள கனேடிய பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தை அணுகுமாறு கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அலுவலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் பயணத்துக்கான ஆதாரத்தைத் தங்களுடன் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயண ஆதாரம் என்பதில், பயணச்சீட்டு, எழுத்துப்பூர்வ தன்னிலை விளக்கம், பயணத்திட்டம் அல்லது அவசரமாக பயணிப்பதற்கான ஆதாரம் ஆகியவை அடங்கியிருக்கவேண்டும்.

இன்னொரு விடயம், அவரச பாஸ்போர்ட்டுக்கு வழக்கமான கட்டணத்தை விட 110 டொலர்கள் அதிகம் செலுத்தவேண்டியிருக்கும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.