காதலை கைவிட்டமையினால் காதலியின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞன்

0
353

கண்டி, கட்டுகஸ்தோட்டயில் நேற்று காலை 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 

12 வருட காதலை கைவிட்டமையினால் கோபமடைந்த இளைஞன் காதலியின் வீட்டிற்கு தீ வைத்து காதலியையும் அவரது தந்தையும் கொலை செய்த நிலையில் குறித்த இளைஞனும் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று காலை 6.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காதலியின் தாய் ராணிவேலுராஜு பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கட்டுகஸ்தோட்டை, மெனிக்கும்புர, ரணவன வீதியைச் சேர்ந்த முத்துத்தம்பி ஈஸ்வரதேவன் என்ற 70 வயதுடைய நபரும், அவரது மகள் ஈஸ்வரதேவன் சந்தரவாதினி என்ற 30 பெண் மற்றும் அவரது காதலனே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட சந்தரவாதினி 12 வருடங்களாக காதலித்த இளைஞனை திருமணம் செய்தக் கொள்வதாக வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் சில காலத்திற்கு முன்பு சந்திரவாதினி காதலனை விட்டு பிரிந்து சென்றதால் அவர்களுக்குள் அடிக்கடி வாய்தகராறுகள் ஏற்பட்டுள்ளது.

காதலி உறவில் இருந்து விலகியதால் கோபமடைந்த காதலன், காதலியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வாய்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று காலை காதலன் பெட்ரோலுடன் வீட்டிற்கு வந்துள்ளார். காதலியுடன் நிச்சயதார்த்தம் செய்ய அனுமதிக்காவிட்டால் அனைவரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

சந்திரவாதினியின் தந்தை மற்றும் தாயாரும் வாய்த்தகராறில் ஈடுபட்டதால், காதலன் வீட்டின் முன்பக்க கதவை அடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ வேகமாக பரவியுள்ளது. உடனடியாக அயலவர்கள் தீயை அணைக்க முயன்றும் பலனில்லை.

தீப்பற்றி எரிந்த வீட்டில் இருந்த சந்திரவதினியின் தாயாரை அயலவர்கள் காப்பாற்றியுள்ளனர். பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியிருந்த அவர் உடனடியாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்குடும்பத்தின் உயிரிழந்த தந்தை வெற்றிலை, பாக்கு வியாபாரம் செய்துள்ளார்.. சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பரிசோதகர் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பன்னரதன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“காலையில் சண்டை சத்தம் கேட்டது. எனினும் நாங்கள் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் வீட்டில் சண்டைகள் பொதுவாக நடக்கும். வீடுகள் அருகருகே இருப்பதால் சத்தம் கேட்கும். எனினும் இன்று எங்களை காப்பாற்றுங்கள் என சத்தம் கேட்டது. எனினும் அங்கு செல்வதற்குள் வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்து விட்டது” என அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.