உக்ரைனியர்களுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள உதவிப் பொருட்களை அனுப்பும் பிரித்தானியா!

0
438

ரஷ்ய துருப்புக்களால் சூழப்பட்ட உக்ரைனிய நகரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம், 2 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள முக்கிய பொருட்களை அனுப்ப உள்ளது.

நாட்டின் அரசாங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து உக்ரைனுக்கு உலர் உணவுகள், பொதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் தண்ணீரை நன்கொடையாக பிரித்தானியா அனுப்பும் என்று வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இந்த முன்னெடுப்பு குறித்து கூறுகையில்,

‘உணவு மற்றும் பொருட்களின் இந்த முக்கிய நன்கொடை ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரைனிய மக்களுக்கு ஆதரவளிக்க உதவும்.

எங்கள் குழுக்கள், எங்கள் போலந்து மற்றும் ஸ்லோவாக்கிய நண்பர்கள் மற்றும் உக்ரைன் அரசாங்கத்துடன் இணைந்து இரவு-பகல் பாராது உழைத்து, மிகவும் ஆபத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு மிகவும் மோசமாகத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதை உறுதிசெய்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.

போலந்து மற்றும் ஸ்லோவாக்கியாவில் உள்ள நிலையங்கள், அடுத்த வார தொடக்கத்தில் இருந்து பொருட்களை வழங்க தயாராக உள்ளன என்று வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அங்கிருந்து, சுமார் 25 டிரக் கொள்கலன்கள் மூலம் வீதி மற்றும் புகையிரதம் மூலம் உக்ரைனிய சமூகங்களுக்கு மிகவும் தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.