உலக வங்கியிடம் கடன் கேட்க்கும் இலங்கை! விரைவில் சந்திப்பு! விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ள பசில்!

0
510

பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசாங்கம், பாரிய பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகிறது

அந்தவகையில் பலரது கோரிக்கைகளையும் நிராகரித்து வந்த அரசாங்கம், இறுதியில் சர்வதேச நாணய நிதியத்திடம் சரணடைந்தது. இதனையடுத்து நிதியமைப்புக்கள் என்ற வகையில் உலக வங்கியிடமும் இலங்கை அரசாங்கம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி 2020 முதல் அந்நிய செலாவணி கையிருப்பில் 70வீத வீழ்ச்சியை கண்டுள்ள இலங்கை, உணவு மற்றும் எரிபொருள் உட்பட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு செலுத்த முடியாமல் தடுமாறுகிறது.

2022 பெப்ரவரி மாத நிலவரப்படி 2.31 பில்லியன் என்ற சொற்பமான வெளிநாட்டு நாணயக் கையிருப்புகளை இலங்கை கொண்டுள்ளது.

எனினும் எதிர்வரும் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டொலர் சர்வதேச இறையாண்மைப் பத்திரம் உட்பட, இந்த ஆண்டு முழுவதும் சுமார் 4 பில்லியன் டொலர் கடனையும் இலங்கை அரசாங்கம் திருப்பிச் செலுத்த வேண்டும்.

இந்தநிலையில் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஒரு வழியைத் தேட, நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அடுத்த மாதம் வோசிங்டனுக்கு சென்று சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்தே உலக வங்கியிடம் இலங்கை நிதி உதவியை கோரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக வங்கி, பொதுவாக ஏற்றுமதியை அதிகரிக்கவும், பொருளாதார போட்டித்தன்மையை மேம்படுத்தவும் மற்றும் வளர்ச்சிக்கு உதவவும் ஆதரவை வழங்குகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய கடன் திட்டத்தில் நுழைந்த பின்னர், உலக வங்கியின் உதவிகள் கிடைக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் நிதியுதவிகள் தொடர்பில் இலங்கையுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று உலக வங்கி கூறியுள்ளது.