மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள்கள் கிடைக்கப்பெறாமையினால் மாணவர்கள் பாதிப்பு

0
35

முல்லைத்தீவு – தேராவில் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கான மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள்களை இன்றைய தினம் வழங்கப்படாமையானது தங்களுடைய தவறு என முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கான மாகாணமட்ட பரிட்சைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11 மற்றும் தரம் 10 மாணவர்களுக்கான மாகாணமட்ட பரீட்சை வினாத்தாள்கள் கிடைக்கப்பெறாத நிலையில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமயம் மற்றும் சுகாதாரம் ஆகிய பாடங்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் கல்வி வலயத்தினால் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டு இன்றைய தினம் பரீட்சைகள் நடைபெற்றன.

ஆனால் தேராவில் வித்தியாலயத்திற்கான பரீட்சை வினாத்தாள்கள் அனுப்பப்படாத நிலையில் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அதாவது அதிகாரிகளின் அலட்சியத்தால் இவ்வாறு மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தங்களால் இடம்பெற்ற தவறு என்றும், அந்த மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வேறு பாடசாலையில் பரீட்சை வினாத்தாள்களை பெற்று போட்டோ பிரதி செய்து வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய மின்சார துண்டிப்பு மற்றும் போட்டோ பிரதி எடுப்பதற்கான தாள்களில் விலையேற்றம் என்பவற்றால் பாதிக்கப்பட்டதுடன் குறித்த பிரதேசத்தில் இருந்து கிட்டத்தட்ட பத்து பதினைந்து கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று குறித்த போட்டோ பிரதிகளை பெற்றுக் கொள்ளவேண்டிய சூழல் காணப்படுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் .

இவ்வாறு பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு மற்றும் அக்கறை இன்மை காரணமாக இவ்வாறு மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிப்பதாகக் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.