கட்டுப்பாடின்றி பணத்தை அச்சிடும் மத்திய வங்கி: இரகசியமாக வைக்கப்பட்டுள்ள நேற்று அச்சிட்டப் பணம்

0
321

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகள் மற்றும் மூலோபாய ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது இலங்கை மத்திய வங்கி, நாட்டையும் பொருளாதாரத்தை சீரழித்து, பணவீக்கத்தை அதிகரிக்க செய்யும் வகையில் ரூபாய் நாணயத்தாள்களை தொடர்ந்தும் அச்சிட்டு வருவதாக இலங்கை மனித உரிமை கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஆயிரத்து 500 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் அச்சிடப்பட்டுள்ளது.

மார்ச் முதலாம் திகதி முதல் கடந்த 16 ஆம் திகதி வரை மாத்திரம் 132.66 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதுடன் நேற்று (18) அச்சிடப்பட்ட பணத்தை இரகசியமாக வைத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி, அந்த நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய கடந்த 14 ஆம் திகதி அச்சிடப்பட்ட 83 பில்லியன் ரூபாய் பணமும் இதில் அடங்கும்.

கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக ஆயிரத்து 569.20 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது. பணத்தை அச்சிடுவதால், பொருட்களின் விலைகள் அதிகரிக்காது எனக் கூறி அஜித் நிவாட் கப்ரால், மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்ற பின்னர், 359.66 பில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள், டொலர் நெருக்கடிக்கு மேலதிகமாக ரூபாய் நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் அரசாங்கம் பணத்தை அச்சிட்டதே இதற்கான அடிப்படை காரணம்.

949 இலக்கம் 58 நிதிச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்காக நிதிச் சபையின் அங்கத்துவதில் இருந்து திறைசேரியின் செயலாளரை நீக்கி விட்டு, துறைசார்ந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு பல முறை ஆலோசனை வழங்கியுள்ளது.

இப்படியான சூழ்நிலையில், இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் பணத்தை அச்சிட்டு வருகிறது. எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி பணத்தை அச்சிட்டு வருவதால் டொலர் நெருக்கடி மாத்திரமல்ல, நாட்டில் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன எனவும் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.