800 ஊழியர்களை ஒரே நேரத்தில்பணி நீக்கம் செய்த சம்பவம்! RMT தொழிற்சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

0
313

பிரித்தானியாவில் P&O படகு நிறுவனம் ஒரே நேரத்தில் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில், P&O படகு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர்கள் யார் எனவும், அவர்கள் எந்த நாட்டவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின் போது P&O படகு நிறுவன நிர்வாகமானது ஒரே ஒரு வீடியோ அழைப்பில், 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. மட்டுமின்றி, அடுத்த சில நாட்களுக்கு தங்களின் 20 படகுகளும் சேவையை முன்னெடுக்காது எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது ஆயிரக்கணக்கான பொதுமக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், பணி நீக்கம் செய்த ஊழியர்கள் மத்தில் கொந்த:ளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், தங்கள் பணியாற்றும் படகுகளில் இருந்து வெளியேற மறுத்துள்ளதுடன், அவர்களை தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்களால் கைவிலங்கிட்டு வெளியேற்றும் சூழலும் உருவானது.

இந்த விவகாரம் தொடர்பில் அவசர சட்ட நடவடிக்கை தேவை எனவும், பிரித்தானிய தொழில்துறை வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான செயல்களில் ஒன்றாக இது மாறியுள்ளதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க மீண்டும் அழைப்பு விடுக்கிறோம் என RMT தொழிற்சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

800 ஊழியர்கள் ஒரே நேரத்தில் நீக்கப்பட்ட நிலையில் தற்போது P&O படகு நிறுவனத்திற்கு பிரித்தானியாவில் 2,200 ஊழியர்கள் எஞ்சியுள்ளனர். 1960 காலகட்டத்தில் பயணிகளுக்கான படகு சேவையை தொடங்கிய P&O நிறுவனத்தை 2019ல் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தை சேர்ந்த DP World நிறுவனம் 332 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கியது.

குறித்த நிறுவனமானது 36,500 ஊழியர்களுடன் 103 நாடுகளில் சேவையை முன்னெடுத்து வருகிறது. இதன் தலைவராக தற்போது Sultan Ahmed bin Sulayem உள்ளார். இவர் துபாய் மாகாணத்தின் சுங்க ஆணையத்திற்கும் தலைமை தாங்கி வருகிறார்.

DP World நிறுவனத்தின் தாய் நிறுவனமான Dubai’s sovereign wealth fund நிறுவனமானது கடந்த 2020ல் தங்களது பங்குதாரர்களுக்கு 270 மில்லியன் பவுண்டுகள் ஈவுத்தொகையை வழங்கி கவனத்தை ஈர்த்தது.